மிகச்சிறந்த குணம்

8 hours ago 1

ஒரு ஊரில் மன்னர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு வேட்டையாடு வதில் அதிக இன்பம். அவர் தமது ஆயுதங்களுடன் காட்டில் கொடிய மிருகங்களை வேட்டையாடி விட்டு நகருக்கு எல்லையில் உள்ள கோயில் மரத்தின் நிழலில் சிறிது நேரம் ஓய்வாக உறங்கிக் கொண்டிருந்தார்.திடீரென்று எங்கிருந்தோ ஒரு கல் வந்து மன்னரைக் காயப்படுத்தியது. சுற்றியிருந்த காவலர்கள் நாலா பக்கமும் சென்று, ஒரு நடுத்தர வயதுப் பெண்ணைப் பிடித்து, அழைத்து வந்து மன்னர் முன் நிறுத்தினார்கள்.மன்னர் அந்த பெண்மணியை பார்த்து, ‘‘ஏனம்மா என்மீது கல்லை எறிந்தாய்? என்றார்.

அதற்கு அந்த பெண் அரசரைப் பார்த்து,” மன்னர் பெருமானே, நான் காட்டில் விறகு வெட்டியும், அவைகளை பொறுக்கியும், நாட்டில் விலைக்கு விற்று அதில் கிடைக்கும் வருமானத்தில் என் குழந்தைகளுக்கு உணவு அளிக்கிறேன்.வரும் வழியில் மரத்தில் பழங்கள் இருப்பதை பார்த்தேன். என் குழந்தை களின் நினைவு வந்தது. பிள்ளைகளின் பசியைப் போக்குவது பெற்றவள் கடமை அல்லவா?அந்தப் பழங்களைப் பறிப்பதற்காக கல்லை எடுத்து மரத்தில் எறிந்தேன். தாங்கள் மரநிழலில் உறங்கிக் கொண்டிருந்தது தூரத்தில் இருந்து எனக்கு தெரியவில்லை.

நான் எறிந்த அந்தக் கல்லானது உங்கள் மீது பட்டு உங்கள் தூக்கத்தைக் கலைத்ததுடன், உங்களையும் காயப்படுத்தி விட்டது. இந்தத் தவறுக்கு நான்தான் காரணம் தயவுசெய்து என்னை மன்னித்து விடுங்கள்’’ என்று வேண்டி நின்றாள்.மன்னர் அந்தப் பெண்மணியைப் பார்த்து, ‘‘பெண்ணே, நீ செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கின்றாய். அது உன் சிறந்த பண்பு. உன்னை மன்னித்துவிட்டேன்’’ சுற்றியிருந்த காவலர்கள் மன்னரை நோக்கி, ‘‘அரசே, தங்களைக் கல்லால் அடித்தவளை மன்னித்ததுடன் அவளுக்கு பரிசும் தருகிறீர்கள். இச்செயல் எங்களுக்கு வியப்பு அளிக்கிறது’’ என்றனர்.

காவலர்களைப் பார்த்து மன்னன், ‘‘காவலர்களே, அறிவற்ற மரம் கல்லால் அடித்தால் பழம் தருகிறது. அவ்வாறு இருக்க அறிவுள்ள நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? மேலும், அவள் வேண்டுமென்று என்னைக் கல்லால் அடிக்கவில்லை. அவள் தன் பிள்ளைகளின் பசியைப் போக்கவே மரத்தின் மீது கல் எறிந்தாள். அது தாயாகிய அவள் கடமை அல்லவா? அவள் அவளுடைய பிள்ளைகளின் நலனைச் சிந்திக்கும் போது, நான் என் குடிமக்களின் நலன் கருதியே அவளுக்குப் பரிசு வழங்கினேன்’’ என்றார். காவலர்கள் மன்னரின் விளக்கம் கேட்டு பெருமகிழ்ச்சி அடைந்தனர்.

இறைமக்களே, செய்த தவறுக்கு மனம் வருந்தி மன்னிப்பு கேட்பது மிகச் சிறந்த குணமாகும். இக்காலத்தில் சிலர் செய்வதையெல்லாம் செய்துவிட்டு ‘‘தெரியாமல் செய்துவிட்டேன் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்’’ என உதட்டளவில் சொல்லிவிட்டுப் போவதையும், ‘‘இதிலென்ன தவறு இருக்கிறது? யாரும் செய்யாததையா நான் செய்துவிட்டேன்’’ என தங்கள் தவறினை நியாயப்படுத்துவோரும் பெருகிவிட்டனர்.எனவே மன்னிப்பு கேட்பதோ, அல்லது மன்னிப்பதோ உதட்டளவில் இல்லாமல் உள்ளார்ந்த மனதுடன் செய்து இறைவனைத் தேடுவோம்.
– அருள்முனைவர்: பெ.பெவிஸ்டன்.

The post மிகச்சிறந்த குணம் appeared first on Dinakaran.

Read Entire Article