குரு வணக்கம் கோடி நன்மை தரும்

5 hours ago 3

ஜூலை 10 குரு பூர்ணிமா

மாதா பிதா குரு தெய்வம் என்பது முன்னோர் வாக்கு. நம்மை உலகிற்கு காட்டிய தாயும், உலகை நமக்குக் காட்டிய தந்தையும், உலக நடைமுறையை நமக்கு போதித்த குருவும் தெய்வத்திற்கு சமமானவர்கள் என்பது இதன் பொருள். இதையே, மாதா, பிதா, குரு ஆகிய மூவரும் கடவுளைவிட மேலானவர்கள் என மற்றொரு விதமாகவும் பொருள் கொள்ளலாம். இத்தகைய குருவுக்கு மரியாதை செய்யும் நாளே குருபூர்ணிமா எனப்படும். இந்நாளில் நம் உயர்வுக்குக் காரணமான குருவை வணங்கி பணிவது ஒவ்வொருவரின் கடமையாகும்.

திதிகளில் பௌர்ணமி திதி தனித்துவமிக்கது. ஒவ்வொரு மாத பௌர்ணமியும் ஒரு முக்கிய நிகழ்வாக வருவதே இதன் தனிச் சிறப்பாகக் கூறலாம். சித்திரை மாத பௌர்ணமி, பல ஆலயங்களில் பால்குட உற்சவமாகவும், வைகாசி மாத பௌர்ணமி முருகப் பெருமான் பிறந்த விசாகத் திருவிழாவாகவும், ஆனி மாத பௌர்ணமி ஆனித் திருமஞ்சனம் மற்றும் குரு பூர்ணிமா ஆரம்ப தினமாகவும், ஆடி மாதப் பௌர்ணமி வரலக்ஷ்மி விரதம் மற்றும் குருபூர்ணிமா முடியும் தினமாகவும், ஆவணி மாத பௌர்ணமி ஆவணி அவிட்டமாகவும், புரட்டாசி மாத பௌர்ணமி உமாமகேசுவர விரதமாகவும், ஐப்பசி மாத பௌர்ணமி அண்ணாபிஷேகமாகவும், கார்த்திகை மாத பௌர்ணமி கார்த்திகை தீபமாகவும், மார்கழி பௌர்ணமி ஆருத்ரா தரிசனமாகவும் , தைமாத பௌர்ணமி தைப்பூசமாகவும், பங்குனிமாத பௌர்ணமி பங்குனி உத்திரமாகவும் கொண்டாடப்படுகிறது. இத்தனை சிறப்புப்பெற்ற பௌர்ணமியில் ஆனித் தொடங்கி ஆடி வரையில் வருவதே குரு பூர்ணிமா.

குரு பூர்ணிமா பல்வேறு ஆன்மிக கதைகளிலிருந்து உருவாகிறது. சிவபெருமான் இந்த நாளில்தான் தன் ஞானத்தை பக்தர்களிடம் பகர்ந்து முதல் ஆசிரியரானதாக புராணங்கள் கூறுகின்றன. மற்றொரு கதைப்படி வேதவியாசர், இந்நாளில் தன் நான்கு சீடர்களுக்கு வேத போதனையை துவக்கினார். புத்த மதத்தில் புத்தர் சாரநாத்தில் தன் சீடர்களுக்கு தனது முதல் பிரசங்கத்தை வழங்கினார். சமண மதத்தில் மகாவீரர் தனது முதல் சீடருக்கு உபதேசம் செய்தார். இப்படி முதன் முதலாக உபதேசம் செய்யப்பட்ட நாளாததால் இது குருவுக்கு மரியாதை செய்யும் நாளாக உருப்பெற்றது.

ஒவ்வொருவருக்கும் அவரை கவர்ந்த அல்லது அவரது முன்னேற்றத்திற்கு தூண்டுகோலாக இருந்த ஆசிரியர்கள் இருப்பர். ஆனால், படித்தவர், படிக்காதவர், பணக்காரர், ஏழை என இந்து மதத்தினர் அனைவருக்கும் ஒரு ஆசிரியர் இருக்கிறார் என்றால், அவர்தான் வேதவியாசர். இவர் வேதங்களை வகைப்படுத்தியவர். மகாபாரதத்தை இயற்றியவர். இவர் வசிஷ்டரின் கொள்ளுபேரர், சக்தி முனிவரின் பேரர், பராசர முனிவரின் குமாரர், சுகபிரம்மரிஷியின் தந்தை. அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர், அதாவது ஆச்சாரியார்.

இந்துமதத்தின் புனித நூல்களில் முதன்மையானது முக்கியமானது வேதங்களாகும். வேதம் என்றால் அறியப்படவேண்டியவை என்று பொருள். எவற்றை அறிந்தால் ஞானம் பெறமுடியுமோ அவற்றையெல்லாம் அறியத் துணை நிற்கும் ஒலிக்கூட்டங்களின் தொகுப்பு. இதையே நமது தர்மங்களின் தொகுப்பாக பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு வருகின்றது. இதில் இடம்பெற்றுள்ள தர்மங்கள் யாவும் விஷ்ணு பகவானால் உருவாக்கப்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன.

பண்டைய காலத்தில் தவமிருந்த ஞானிகள், ரிஷிகள் கடுமையாக தவம் செய்து அந்த மந்திரங்களை தியானம் செய்து அந்தந்த மந்திரங்களுக்குரிய தேவதைகளை வழிபட்டு அதை உச்சரிக்க கைவரப் பெற்றனர். பின்னர் அதை தங்கள் வாய்வழியாக உச்சரித்து மக்களை சென்றடையச் செய்தனர். இப்படி இந்து சமயத்தின் பழமையான தொன்மமாகவும் அழிவற்ற படைப்பு விதிகளின் தொகுப்பாகவும் வேதம் ஏற்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

வேதத்தில் இயற்கை முதல் இறைவன் வரை அனைத்தைப் பற்றியும் இடம் பெற்றுள்ளன என்றாலும், அது சுயநலத்துக்காக ஓதப்படவில்லை. உலக நன்மைக்காகவும், மக்கள் நலனுக்காகவுமே ஓதப்படுகிறது. வேதம் ஓதுவதும், கட்டுப்பாடான தவ வாழ்க்கையை மேற்கொள்ளுவதுமே, ஆத்ம ஞானம் பெறுவதற்கான வழியாக பார்க்கப்பட்டதால், இவ்விதிகளைக் கொண்டே படைப்புக் கடவுளான பிரம்மன் உலகை படைத்ததாக இந்து தொன்மங்கள் கூறுகின்றன. எனவே, இதனடிப்படையிலும் வேதங்கள் அநாதி, அதாவது, அழிவற்றவையாகவே பார்க்கப்படுகின்றன. கட்டற்ற வாழ்வியல் கருத்துக்களை கொண்ட வேதத்தை குறைந்த ஆயுட்காலத்தையும், குறைவான புரிதல் தன்மையும் கொண்ட கலியுகத்தார் புரிந்து கொள்வதற்கு வசதியாக வேதவியாசர் அதை நான்காக பிரித்தார்.

அவைமுறையே ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களாகும். வேதம் என்பது ஒரு பெரிய மரம், அதன் நான்கு பிரிவுகளும் நான்கு பெரிய கிளைகள், ஒவ்வொரு பெருங்கிளை யினின்றும் பற்பல சிறு கிளைகள் தோன்றுவது போல ஒவ்வொரு வேதத்திற்கும் (பிரிவு) பல சிறு கிளைகள் உண்டு. அவைகள் முறையே சாகைகள் ருக்குகள் அல்லது சூக்தங்கள் (மந்திரங்கள்) என்றழைக்கப்பட்டன. இதன்படி ரிக்வேதம் 2 சாகைகளையும், யஜுர்வேதம் 100 சாகைகளையும், சாமவேதம் 1000 சாகைகளையும், அதர்வணவேதம் 9 சாகைகளையும் கொண்டுள்ளது. இந்த செய்தி முக்திகோபநிஷத்தில் சற்று வேறுபட்டு உள்ளது. ரிக் வேதம் 21 சாகைகளையும், யஜுர்வேதம் 109 சாகைகளையும், சாமவேதம் 1000 சாகைகளையும், அதர்வண வேதம் 50 சாகைகளையும் கொண்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வேதத்திலும் சம்ஹிதை. பிராம்மணங்கள், உபநிடதங்கள் என்னும் மூன்று பிரிவுகள் உள்ளன. சம்ஹிதை என்றால் தொகுதிகள் என்று பொருள்படும். இவை வேள்விகள் மற்றும் வைதீக கர்மாக்களில் உபயோகப்படுத்தப்படும் சூக்தங்கள் என்னும் மந்திரங்களைக் கொண்டவை. பிராம்மணங்கள் நிந்தை, ஸ்துதி, கதைகள், கதை வசனங்கள் போன்ற பிரம்மவித்தைப் பற்றிய சூட்சுமங்களை உள்ளடக்கியவை. உபநிடதங்கள் எனப்படுபவை 108 ஆகும் இவைகளில் ஐதரேய, கௌஷீதகி, தைத்திரிய, கட, சுவேதாசுவாத, ப்ரஹதாரண்ய, ஈச, கேன, சாந்தோக்ய, முண்டூக்ய, முண்டக, ப்ரச்ன ஆகிய பன்னிரண்டு பிரதானமானவை. இவைகளுக்கு தர்மஸ்தாபன ஆச்சார்யார்களும் அவர்களது சிஷ்யர்களும் பாஷ்யம் எழுதியுள்ளனர்.

ரிக்வேத சம்ஹிதை 1017 சூக்தங்களைக் கொண்டது. இவை பத்து மண்டலம் அல்லது விருத்தமாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் அக்னியில் ஆவாஹணம் செய்வதற்குரிய மந்திரங்களாகும். யஜுர்வேத சம்ஹிதை 1886 சூக்தங்களைக் கொண்டது. இவை நாற்பது மண்டலம் அல்லது விருத்தமாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் தேவதா ஆவாஹணம், தேவதா ஸ்துதி செய்வதற்குரிய மந்திரங்களாகும். சாமவேத சம்ஹிதை 1017சூக்தங்களைக் கொண்டது. இவை பத்து மண்டலம் அல்லது விருத்தமாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் இசை பற்றியது. அதர்வணவேத சம்ஹிதை 735 சூக்தங்களைக் கொண்டது. இவை இருபது மண்டலம் அல்லது விருத்தமாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் வியாபாரிகள் விவசாயிகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வேதத்திற்கும், “மந்திரங்கள்” (கடவுளால் தரப்பட்டவையாக கருதப்படும் பாடல்கள்), பிராமணா ( உரை அல்லது சடங்கு வழிமுறைகள்), அரண்யகா (காட்டில் வாழும் முனிவர்களின் உரைகள்), உபநிடதங்கள் (வேதங்களுக்கான தத்துவ உரைகள்/ விளக்கங்கள்/ எதிர்ப்புக்கள்) என நான்கு பாகங்கள் உண்டு. முதல் இரண்டு பாகங்களும் “கர்ம கண்டங்களாகவும்”, (ஓதுவதுக்கும், சடங்குக்கும்) அதாவது செயலுக்கு அல்லது அனுபவத்திற்கு உரியவையாகவும், கடைசி இரண்டும் மெய்ப்பொருள் உணர்வதற்கு உரியவையாகவும் ஓதப்படுகிறது. வேதங்களை தனி நபராக ஓதாமல் குழுவாக சேர்ந்து ஓதினால் நல்ல பலன் கிடைப்பதை விஞ்ஞானமும் ஒப்புக் கொள்கிறது.

நான்கு வேதங்களுக்கும் நான்கு உபவேதங்கள் உள்ளன. அவைமுறையே ஆயுர் வேதம் (ரிக் வேதத்தின் உபவேதம். இது மருந்து, மூலிகை போன்றவற்றைக் குறிப்பிடுகின்றது), தனுர் வேதம், (யஜுர் வேதத்தின் உபவேதம். இது போர்க் கலையை விவரமாகக் கூறுகின்றது), காந்தர்வ வேதம் (சாம வேதத்தின் உபவேதம். இது இசை, நடனம், ஆகிய நுண்கலைகளை விளக்குகின்றது), சில்ப வேதம், (அதர்வண வேதத்தின் உபவேதம்). இது கட்டடக் கலையை விவரிக்கின்றது.

இப்படி வேதத்தை அனைவரும் படித்து பயன்படும் விதமாக படைத்த வேதவியாசர், ரிக் வேதத்தை சுமந்து என்ற மகரிஷியிடமும், யஜுர் வேதத்தை வைசம்பாயணரிடமும், சாம வேதத்தை ஜைமினி முனிவரிடமும், அதர்வணவேதத்தை பைலரிடமும் ஒப்படைத்து அவற்றைக் கற்று மற்றவர்களுக்கு கற்பிக்கும்படி செய்தார். வேதங்களின் கருத்துக்களை உள்ளடக்கி 18 புராணங்களாகவும் உருவாக்கினார். அதை சூத புராணிகர் என்ற முனிவருக்கு உபதேசித்தார். சூத புராணிகர் அதை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லும்படி அருள் செய்தார்.

(தொடரும்)

தொகுப்பு:  நெய்வாசல் நெடுஞ்செழியன்

The post குரு வணக்கம் கோடி நன்மை தரும் appeared first on Dinakaran.

Read Entire Article