தர்மபுரி, டிச.2: பெஞ்சல் புயல் தாக்கத்தால், தர்மபுரி மாவட்டத்தில் 2வது நாளாக கனமழை பெய்தது. மழையின் காரணமாக சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. வத்தல்மலையில் பாறைகள் உருண்டு மண்சரிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடந்த 2 நாளில் 532.3 மி.மீ. பெய்துள்ளது.
வங்கக்கடலில் பெஞ்சல் புயல் உருவானதை தொடர்ந்து, தர்மபுரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. 2வது நாளாக நேற்றும் விடிய, விடிய கனமழை கொட்டியது. தாழ்வான பகுதியான தர்மபுரி நான்கு ரோடு, தர்மபுரி – சேலம் மெயின் ரோடு பச்சையம்மன் கோயில் அருகே, மதிகோண் பாளையம், முகமது அலி கிளப்ரோடு, குமாரசாமிபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி, நல்லம்பள்ளி, தொப்பூர், காரிமங்கலம், பென்னாகரம், பாலக்கோடு, மாரண்ட அள்ளி, மொரப்பூர், கம்பைநல்லூர், கடத்தூர், பொம்மிடி மற்றும் மாவட்டம் முழுவதும் நேற்று கனமழை பெய்தது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தர்மபுரி டவுன் பகுதியில் உழவர் சந்தை, வாரச்சந்தை, தினசரி காய்கறி மாா்க்கெட்டில் போதிய வியாபாரம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க வந்த மக்கள் மட்டும் சிலர் ரெயின் கோட் அணிந்தும், குடை பிடித்தவாறும் சென்றனர். இடி, மின்னலுடன், இரவு நேரத்திலும் இடைவிடாமல் கனமழை பெய்தது. தர்மபுரி நகராட்சி அலுவலகம் அருகே கந்தசாமி வாத்தியார் சாலையில், 30 ஆண்டு பழமையான புளியமரம் முறிந்து சாலையில் விழுந்ததால், அந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர், மாற்று சாலையில் வாகனங்கள் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
கந்தசாமி வாத்தியார் தெரு, துரைசாமி நாயுடு தெரு, பிஆர் சீனிவாச ராவ் தெரு மற்றும் நகரத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் விநியோகம் நிறுத்தப்பட்டது. தர்மபுரி நகராட்சி கமிஷனர் சேகர் தலைமையில், பொறியாளர் புவனேஸ்வரி மற்றும் நகராட்சி ஊழியர்கள், மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சாலையில் விழுந்த புளியமரத்தை இயந்திரம் கொண்டு துண்டு துண்டாக வெட்டி அகற்றினர். அதன்பின் போக்குவரத்து தொடங்கியது. மாலையில் மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டது. வத்தல்மலையில் 18வது கொண்டை ஊசி வளைவு சாலையில் பாறைகள் மற்றும் மண் சரிந்து சாலையில் விழுந்தது. இதனால் பஸ், லாரி மற்றும் நான்கு சாக்கர வாகனங்கள் செல்ல முடியாமல் தவித்தன. சில வாகனங்கள் திரும்பின. இதையடுத்து வத்தல் மலை அடிவாரத்தில் வனத்துறையின் சோதனைச்சாவடி மூடப் பட்டது. வாகனங்கள் செல்ல முடியாதபடி கம்பம் சாலையின் குறுக்கே வைக்கப்பட்டது.
மீறி செல்லும் வாகனங்கள் எச்சரிக்கை செய்து திருப்பி விடப்பட்டன. பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு மண்சரிவை சீர் செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். ஆனால் பாறைகளை அகற்ற முடியவில்லை.தர்மபுரி மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குனருமான திவ்யதர்சினி, கலெக்டர் சாந்தி ஆகியோர், தர்மபுரி நகராட்சி பகுதியில் முறிந்து விழுந்த மரத்தை பார்வையிட்டு, அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தனர். பின்னர் பாரதிபுரம் மற்றும் அப்பாவு நகர் பகுதிகளில் வடகிழக்கு பருவ மழையொட்டி, மழைநீர் தேங்காத வண்ணம் மழைநீர் மற்றும் கழிவுநீர் வெளியேற்றப்படும் பணிகளை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர்.
மழைநீரை உடனடியாக அகற்றுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். தொடர்ந்து பெய்து வரும் மழையினால் தர்மபுரி இலக்கியம்பட்டி ஏரி நிரம்பி வருவதையும், கரை பாதுகாப்பு குறித்தும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வுகளின் போது, கூடுதல் கலெக்டர் கவுரவ்குமார் உள்ளிட்ட தொடர்புடைய உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். தர்மபுரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 6 மணி முதல் நேற்று மாலை 6 மணிவரை மொத்தம் 532.3 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.
The post மாவட்டம் முழுவதும் 2வது நாளாக கனமழை appeared first on Dinakaran.