மாவட்டத்தில் வெள்ளபாதிப்பு பகுதிகளில் மழைநீரை வெளியேற்ற அதிக திறன் பிரத்யேக மோட்டார் பம்புகள்: 660 தற்காலிக தங்குமிடங்கள் ரெடி; மீட்பு பணிக்கு 7 இடங்களில் படகுகள்; பால், உணவு, குடிநீருடன் நிவாரண முகாம்கள்

1 month ago 4

திருவள்ளூர்: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அறிவுரை வழங்கினார்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து துறை சார்ந்த அலுவலர்களுடன் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில், வேளாண்மைத்துறை இயக்குநர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பி.முருகேஷ், மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினர். மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயகுமார் முன்னிலை வகித்தனர்.

ஆய்வு கூட்டத்திற்கு பின்னர் நிருபர்களிடம் கலெக்டர் கூறியதாவது: மாவட்டத்தில் பாதிப்பு ஏற்படும் 133 இடங்கள் கண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை – 2024 எதிர்கொள்ள சம்பந்தப்பட்ட அனைத்து துறை சார்ந்த அலுவலர்களுக்கு கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி நடந்த ஆய்வுக் கூட்டத்தில் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் தலைமையில் கடந்த அக்டோபர் 7ம் தேதி நடந்த ஆய்வுக்கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் பணிகள் தொடர்பாகவும் சிறப்பாக வெள்ளத்தடுப்பு பணிகள் மேற்கொள்ள அனைத்து துறை சார்ந்த அலுவலர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டத்தில் மிகவும் அதிகமாக பாதிப்பு ஏற்படும் பகுதிகள் 8, அதிகளவில் பாதிப்பு ஏற்படும் பகுதிகள் 39, மிதமாக பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகள் 44, குறைவாக பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகள் 42 என மொத்தம் 133 பகுதிகள் மழையால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் மேற்படி பகுதிகளுக்கு பல்வேறு துறைகள் அடங்கிய மண்டல அளவில் 64 குழுக்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். மேலும், 4 குழுக்கள் முறையே முன்னெச்சரிக்கை குழுவில் 10 உறுப்பினர்கள் கொண்ட 1 குழுவும், தேடுதல் மற்றும் மீட்பு குழுவில் 20 உறுப்பினர்கள் கொண்ட 2 குழுவும், வெளியேற்றுதல் குழுவில் 51 உறுப்பினர்கள் கொண்ட 3 குழுவும், தற்காலிக தங்கும் முகாம் குழுவில் 61 உறுப்பினர்கள் கொண்ட 9 குழுக்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். இந்த குழுக்களுக்கு கடந்த 4ம் தேதி நடந்த ஆய்வுக்கூட்டத்தில் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் 4480 முதல் நிலை பொறுப்பாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 500 தன்னார்வலர்களுக்கு ஆப்த மித்ரா திட்டத்தின் கீழ் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. மாநில பேரிடர் மீட்புப் படையில் பயிற்சி பெற்ற 50 அலுவலர்களும் தயார் நிலையில் உள்ளனர். பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு புயல் பாதுகாப்பு மையங்கள் வைரவன்குப்பம், காட்டுப்பள்ளி ஆகிய 2 இடங்களிலும், பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள், திருப்பாலைவனம், ஆண்டார்மடம், பள்ளிப்பாளையம், எளாவூர் -1 மற்றும் எளாவூர் -மிமி (மெதிப்பாளையம்) ஆகிய 5 இடங்களில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளன. மேலும், 660 தற்காலிக தங்குமிடங்களும் தயார் நிலையில் உள்ளன.

கால்நடை பராமரிப்புத்துறை வாயிலாக கால்நடைகளை பாதுகாப்பாக பராமரிக்க 64 தற்காலிக தங்குமிடம் மற்றும் 144 முதல்நிலை பொறுப்பாளர்கள் பயிற்சி அளிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். சுகாதாரத்துறை வாயிலாக 42 மருத்துவ குழுக்கள் மற்றும் 76 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளது. மாவட்டத்தில் 70,550 மணல் மூட்டைகள், 4,395 சவுக்கு கம்பங்கள், 38 பொக்லைன், 83 ஜேசிபி, 154 மரம் அறுக்கும் கருவி, 391 கயிறுகள், 110 படகுகள், 207 மோட்டார் படகுகள், 206 நீர் இறைக்கும் மோட்டார், 7 சூப்பர் சக்கர், 81 ஜெனரேட்டர்கள், 31 தண்ணீர் லாரிகள், 78 சின்டெக்ஸ், 75 குப்பை லாரிகள், 14 சிறிய வாகனங்கள், 194 பாக்கிங் இயந்திரங்கள், 175.83 ப்ளீச்சீங் பவுடர் 7.51 குளோரின் மாத்திரைகள், 90 தார்ப்பாய்கள், 738 டார்ச் லைட்கள், 3400 மின் கம்பங்கள், 445 மின் கம்பிகள் ஆகியவை தயாராக உள்ளன.

வெள்ளம் பாதிக்கும் பகுதிகளில் மீட்பு பணிகள் மேற்கொள்ள படகுகள் 7 இடங்களில் (ஆவடி மாநகராட்சி, வட்டார வளர்ச்சி அலுவலகம், மீஞ்சூர், பூந்தமல்லி, வில்லிவாக்கம், திருவள்ளூர் நகராட்சி அலுவலகம் திருநின்றவூர், பேரூராட்சி அலுவலகம் நாரவாரிக்குப்பம்) முன்கூட்டியே நிறுத்திவைக்கப்படும். கர்ப்பிணி பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பிரசவ தேதியை அறிந்து அவர்களை மருத்துவமனைக்கு பாதுகாப்பாக கொண்டு செல்ல செயல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. வெள்ளம் அதிகமாக சூழ்ந்துள்ள பகுதிகளில் மழைநீரை வெளியேற்ற 100 எச்பி குதிரை திறன் கொண்ட பிரத்யேகமான மோட்டார் பம்புகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்படும் பொதுமக்களுக்கு உணவு, குடிநீர், பால், பிரட், பிஸ்கட்ஸ் போன்றவை வழங்க தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் அரசினால் அறிவிக்கப்படும் வெள்ளம் மற்றும் புயல் தொடர்பான முன்னெச்சரிக்கை செய்திகளை அறிந்து அதன்படி செயல்பட வேண்டும். திருவள்ளூர் மாவட்டத்தில் பொது மக்கள் மழை, வெள்ளம் தொடர்பாக தங்கள் புகார்களை தெரிவிக்க மாவட்ட பேரிடர் தடுப்பு கட்டுப்பாட்டு அறைக்கான கட்டணமில்லா தொலைபேசி எண்.1077 இருபத்து நான்கு மணி நேரமும் இயங்கி வருகிறது.

மேலும், கட்டுப்பாட்டு அறை 044 – 27664177, 044 – 27666746 க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். மேலும், வாட்ஸ் அப் எண். 9444317862, 9498901077 ஆகியவை மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் இயங்கும் எண்களுக்கு தகவல் தெரிவிக்கலாம். திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை – 2024 எதிர்கொள்ள சம்பந்தப்பட்ட அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் தயார் நிலையில் உள்ளனர். எனவே, பொதுமக்கள் வெள்ளத் தடுப்பு பணிகளில் ஈடுப்படும் அலுவலுர்களுக்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில், உதவி கலெக்டர் (பயிற்சி) ஆயுஷ் குப்தா, மாவட்ட சுகாதார அலுவலர் பிரியாராஜ், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திர போஸ், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் தி.சண்முகவள்ளி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வெங்கட்ராமன், மற்றும் வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

* திருத்தணி தொகுதியில் மழை பாதிப்பு தெரிவிக்க செல்போன் எண் வெளியீடு
வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் உத்தரவின் பேரில், அனைத்து துறை அலுவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்நிலையில், திருத்தணி சட்டமன்ற தொகுதியில் மழைக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக மழைநீர் தேக்கம், மரம் விழுதல், மின்வெட்டு, மின் கசிவு, மருத்துவ உதவி, தொடர்பாக புகார் செய்ய 79043 32952, 80985 89572, 77086 89118 எண்கள் தொடர்பு கொள்ள வேண்டும் என்று எஸ்.சந்திரன் எம்.எல்.ஏ பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

The post மாவட்டத்தில் வெள்ளபாதிப்பு பகுதிகளில் மழைநீரை வெளியேற்ற அதிக திறன் பிரத்யேக மோட்டார் பம்புகள்: 660 தற்காலிக தங்குமிடங்கள் ரெடி; மீட்பு பணிக்கு 7 இடங்களில் படகுகள்; பால், உணவு, குடிநீருடன் நிவாரண முகாம்கள் appeared first on Dinakaran.

Read Entire Article