சென்னை: தமிழ்நாடு அரசின் ”நம்ம சென்னை நம்ம சந்தை” அங்காடி மூலம் பாரம்பரிய பசுமை காய்கறிகள்-பழங்கள் விற்பனை தினமும் கிடைக்க தமிழ்நாடு ஏற்பாடு செய்துள்ளது. சென்னைவாழ் மக்களுக்கு பாரம்பரிய பசுமையான காய்கறிகள்-பழங்கள் கிடைக்கச் செய்திடும் வகையில் தமிழ்நாடு அரசால் சென்னையில் செம்மொழிப் பூங்கா வளாகத்தில் ”நம்ம சென்னை நம்ம சந்தை” என்ற அங்காடி 12.01.2024 அன்று தொடங்கப்பட்டு காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தற்போது அனைத்து நாட்களிலும் செயல்பட்டுவருகிறது.
இவ்வங்காடியில் பாரம்பரிய காய்கறிகள், கீரைகள், கிழங்குகள், பழங்கள் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் ஆகியன விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் விளைவிக்கப்படும் சிறப்பு வாய்ந்த காய்கறிகள், பழங்கள், மருத்துவ குணம் கொண்ட காய்கறிகள், பழங்கள், ஆகியன உழவர்களின் விளைநிலங்களிலிருந்து தோட்டக்கலைத் துறையின் நேரடி மேற்பார்வையில் இவ்வங்காடியில் பதிவு செய்துள்ள விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
மேலும், பல்வேறு உழவர் உற்பத்தியாளர் குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களும் இங்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இவ்வங்காடியில் விற்கப்படும் காய்கறிகள், பழங்கள், மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை வாங்கி நாளொன்றிற்கு சுமார் 400 முதல் 450 நுகர்வோர்கள் பயனடைந்து வருகின்றனர். தற்போது இவ்வங்காடியில் சில மாவட்டங்களுக்கே உரிய பிரசித்தி பெற்ற காய்கறிகள், பழங்களான செங்காம்பு கறிவேப்பிலை, வெள்ளை பாகல் (கோவை), முள் சீத்தாப்பழம், நெல்லி, மஞ்சள் பூசணி, சக்கரைவள்ளி கிழங்கு (இளஞ்சிவப்பு நிறம்), சப்போட்டா , பப்பாளி, ரோஸ் ஆப்பிள்(திண்டுக்கல்), மலைப்பூண்டு, பச்சை பட்டாணி, முருங்கை பீன்ஸ், அவகாடோ, சௌ சௌ (கொடைக்கானல்), நேந்திரன், செவ்வாழை, மட்டி வாழை, தேன், இலவங்கம், பட்டை (கன்னியாகுமரி), பன்னீர் திராட்சை, தக்காளி, கோவைக்காய் (தேனி), புளியங்குடி எலுமிச்சை, பாவூர்சத்திரம் வெண்டை, பாவூர்சத்திரம் வெள்ளைக்கத்தரி (தென்காசி), வெண்டை, பிரண்டை (சேலம்), கொடுக்காப்புளி (விருதுநகர்), கேரட், சிவப்பு முட்டைகோசு, பச்சைப் பூக்கோசு (புரோக்கோலி) (நீலகிரி), பாகற்காய், பீர்க்கங்காய், சுரைக்காய் (செங்கல்பட்டு), மூக்குத்தி அவரை, சிறகு அவரை, முருங்கை (திருப்பூர்), அன்னாச்சிப் பழம் , மிளகு(நாமக்கல்), இலவம்பாடி முள்ளு கத்திரி, கீரைகள் (சிறுகீரை, அரைகீரை, சிகப்பு தண்டு கீரை, பாலக்கீரை, மணத்தக்காளி கீரை (வேலூர்), நிலக்கடலை (இராணிப்பேட்டை), வெள்ளரி, நீளமான வெள்ளை கத்திரி, கொத்தவரை, கொத்தமல்லி, புதினா, குடை மிளகாய் (சிவப்பு, மஞ்சள், பச்சை) (கிருஷ்ணகிரி), பஞ்சவர்ணம், பங்கனபள்ளி, ருமானி போன்ற மா இரகங்கள் (கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, சேலம், விருதுநகர்) போன்றவை விற்பனை செய்யப்படுகின்றன.
இவை தவிர பனங்கற்கண்டு (தூத்துக்குடி), மதிப்புக் கூட்டப்பட்ட நெல்லி (திண்டுக்கல்), தோட்டக்கலைத் துறையின் நீலகிரி மாவட்ட தயாரிப்புகளான ஜாம், ஜெல்லி, ஸ்குவாஷ், ஊறுகாய் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் போன்ற பல்வேறு மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன. இதன் வாயிலாக உழவர்களுக்கு உரிய விலை கிடைப்பதுடன் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களான திண்டுக்கல், நீலகிரி, தென்காசி, விருதுநகர், சேலம், திருப்பூர், கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, வேலூர், கன்னியாகுமரி போன்ற பகுதிகளில் விளையும் தனிச்சிறப்பு வாய்ந்த, தினசரி அறுவடை செய்யப்படும் புத்தம் புதிய பசுமைமிகு காய்கறிகள், பழங்கள் நுகர்வோருக்கு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் விளையும் உள்ளூர் காய்கறிகள் மற்றும் பழவகைகள் பசுமை மாறாது நியாயமான விலையில் தோட்டக்கலைத்துறை மூலம் நடத்தப்படும் சென்னை கதிட்ரல் சாலையில் உள்ள செம்மொழிப்பூங்காவில் செயல்பட்டுவரும் ”நம்ம சென்னை நம்ம சந்தை” விற்பனை மையத்தில் அனைத்து நாட்களிலும் காலை 8 மணிமுதல் இரவு 8 மணி வரை கிடைக்கப் பெறுவதால் சென்னையில் உள்ள பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
The post தமிழ்நாடு அரசின் ”நம்ம சென்னை நம்ம சந்தை” அங்காடி மூலம் பாரம்பரிய பசுமை காய்கறிகள்-பழங்கள் விற்பனை: தினமும் கிடைக்க ஏற்பாடு தமிழ்நாடு அரசு நடவடிக்கை appeared first on Dinakaran.