மாவட்டத்தில், கூட்டுறவுத்துறையின் சார்பில் 13 முதல்வர் மருந்தகங்கள் இன்று திறப்பு

3 hours ago 2

*20 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் மருந்துகள் கிடைக்கும்

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள 13 முதல்வர் மருந்தகங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறக்கப்படுகிறது. பொதுமக்களுக்கு அனைத்து மருந்துகளும் 20 முதல் 90 சதவீத தள்ளுபடி விலையில் கிடைக்கும்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தின விழா உரையில், பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்க செய்யும் வகையில் முதற்கட்டமாக தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவுத்துறை மூலம் 1000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும் என அறிவித்தார்.

அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி வட்டத்தில், ஹில்பங்க், சேரிங்கிராஸ், தேனாடுகம்பை, ஊட்டி மார்க்கெட் மற்றும் என்சிஎம்எஸ் வளாகம் ஆகிய பகுதிகளிலும், கோத்தகிரி வட்டத்தில் கோத்தகிரி கூட்டுறவு கடையிலும், கூடலூர் மற்றும் பந்தலூர் வட்டங்களில், பந்தலூர் பஜார், கூடலூரில் 2 இடங்கள், பாடந்தொரை ஆகிய பகுதிகளிலும், குன்னூர் வட்டத்தில் கேத்தி பாலாடா, சேலாஸ் மற்றும் சாந்தூர் ஆகிய பகுதிகள் என மொத்தம் 13 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் 10 கூட்டுறவுத்துறை மூலமாகவும், 3 தனிநபர் தொழில் முனைவோர் சார்பிலும் நடத்தப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் 1000 முதல்வர் மருந்தகங்களை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று 24ம் தேதி திறந்து வைக்கிறார்.

தொடர்ந்து நீலகிரி மாவட்டத்திலும் திறக்கப்பட உள்ளது. ஊட்டியில் உள்ள முதல்வர் மருந்தக குடோனில் இருந்து அனைத்து மருந்துகளும், 13 மருத்தகங்களுக்கும் அனுப்பப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

முதல்வர் மருந்தகங்களில் (ஜெனரிக்) மருந்துகளும், சர்ஜிக்கல்ஸ், நியூட்ரா சூட்டிக்கல்ஸ், பிராண்டட் மருந்தகங்கள், சித்தா, ஆயர்வேதம், யுனானி மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு மருந்து வகைகளுக்கு 20 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளது.

இது குறித்து கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் தயாளன் கூறுகையில், ‘‘நீலகிரி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் 10 மருந்தகங்களும், தனிநபர் தொழில் முனைவோர் 3 மருந்தகங்களும் என 13 முதல்வர் மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக கூட்டுறவு சங்கங்கள் சார்பில் அமைக்கப்பட்டு மருந்தகங்களுக்கு ரூ.2 லட்சம் மானியமும், தனிநபர் தொழில் முனைவோர்களுக்கு மருத்தக கட்டமைப்புகளை உருவாக்குவதற்காக ரூ.1.50 லட்சம் பண மானியமும், ரூ.1.50 மதிப்பில் ஜெனரிக் மருந்துகளும் மானியத்தில் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் முக்கிய நோக்கமே பி.பார்ம், எம்.பார்ம் படித்த இளைஞர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்குவதே ஆகும். மேலும், அனைத்து மருந்துகளும் குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்க செய்வதாகும்.இன்று திறப்பு விழா நடக்கிறது.

ஊட்டி என்சிஎம்எஸ் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கடை திறப்பு விழாவில் தமிழ்நாடு அரசு தலைமை கொறடா ராமசந்திரன், மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்’’ என்றார். இதேபோால் ஊட்டி மார்க்கெட் பகுதியில் செயல்பட்டு வந்த கூட்டுறவு மருந்தகம், ஊட்டி மத்திய பஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இம்மருத்தகமும் இன்று திறக்கப்படுகிறது.

The post மாவட்டத்தில், கூட்டுறவுத்துறையின் சார்பில் 13 முதல்வர் மருந்தகங்கள் இன்று திறப்பு appeared first on Dinakaran.

Read Entire Article