மாவட்டத்தில் கடந்த 3 மாதத்தில் 66 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

3 weeks ago 5

*அனைத்து கிராமங்களிலும் பாதுகாப்பு குழு அமைப்பு

தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில், கடந்த 3 மாதத்தில் 66 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து கிராமங்களிலும், கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.தர்மபுரி மாவட்டத்தில் போதிய தொழில் வளம் இல்லாததால், இம்மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு சென்று, அங்கேயே தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர். அவ்வாறு வெளியூரில் உள்ளவர்கள், தங்களது குழந்தைகளை, தங்களது வயதான பெற்றோர் மற்றும் உறவினர்கள் பராமரிப்பில், சொந்த ஊரிலேயே விட்டு செல்கின்றனர்.

இத்தகைய சூழலில், பெண் குழந்தைகளை பாதுகாத்து, பராமரிப்பதில் பல்வேறு சிரமம் இருப்பதாக கூறி, திருமண வயதுக்கு முன்பே, அதாவது 18 வயதுக்கு முன்பே அவர்களுக்கு குழந்தை திருமணம் செய்து வைக்கப்படுகிறது. தர்மபுரி மாவட்ட நிர்வாகம், இதனை தடுக்க முயற்சி செய்தாலும், இளம் வயது திருமணங்கள் ரகசியமாகவும், மறைமுகமாகவும் அவ்வப்போது நடக்கிறது.

இளம்வயது திருமணத்தால் சிறுமிகள் கர்ப்பம் தரித்து, குழந்தை பிறக்கும் நிலையில் அரசு மருத்துவமனைக்கு வரும் போது, மருத்துவமனை நிர்வாகம் மூலம் காவல் துறைக்கு தகவல் தெரிவித்து, வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில், 88 குழந்தை திருமணங்கள் குறித்த தகவல் வரப்பெற்று, 66 திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு ஆற்றுப்படுத்துதல் வழங்கப்பட்டு கல்வி தொடர நடடிவக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குழந்தை திருமணம் நடைபெற்றதாக 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று, தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தி தலைமை வகித்து கூறியதாவது:

தர்மபுரி மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் மற்றும் பாலியல் குற்றங்கள் நடைபெறாதவாறு தடுக்கப்பட வேண்டும். பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மற்றும் அனைத்து கிராமங்களிலும் இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அனைத்து கிராமங்களிலும், கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவானது 3 மாதத்திற்கு ஒரு முறை கூடி, குழந்தை திருமணம் தடுத்தல் மற்றும் பாலியல் குற்றங்கள் தடுத்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். குழந்தை திருமணம் நடைபெறுவது முன்கூட்டியே கண்டறியப்பட்டு, அந்த திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும். இதுகுறித்த தகவலை 1098 என்ற எண்ணிற்கு தெரிவிக்க வேண்டும். வளரிளம் பருவ கருத்தரித்தல் குறித்து, பள்ளி கல்வித்துறையுடன் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.

நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில், வார்டு அளவில் குழந்தைகள் பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கல்வி நிறுவனங்கள் அருகில், போதை பொருட்கள் விற்பதை கண்காணிக்க வேண்டும். போதை பொருட்களால் பாதிக்கப்படும் குழந்தைகள் கண்டறியப்பட்டு, மறுவாழ்வு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பள்ளி இடை நிற்றல் குழந்தைகள் கண்டறியப்பட்டு, அவர்கள் கல்வியினை தொடர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

குழந்தை தொழிலாளர்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளபட வேண்டும். மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில், 66 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு ஆற்றுப்படுத்துதல் வழங்கப்பட்டு, கல்வி தொடர நடடிவக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குழந்தை திருமணம் நடைபெற்றதாக 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

The post மாவட்டத்தில் கடந்த 3 மாதத்தில் 66 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம் appeared first on Dinakaran.

Read Entire Article