தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், அக்டோபர் 3ம் தேதி வரை உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் 176 முகாம்கள் நடத்தப்படும் என கலெக்டர் தெரிவித்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை, சிதம்பரத்தில் நேற்று தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து, தர்மபுரி நகராட்சி மதிகோண்பாளையம் டிஎன்ஜி மகாலில் நடந்த திட்ட முகாமை, கலெக்டர் சதீஷ் தொடங்கி வைத்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். தர்மபுரி எம்பி ஆ.மணி, வெங்கடேஸ்வரன் எம்எல்ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர். இம்முகாமில் சமூக நலத்துறையின் சார்பில் திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ், 18 பயனாளிக்கு ரூ.10.05 லட்சம் மதிப்பில் தாலிக்கு தங்கத்தை கலெக்டர் வழங்கினார். மேலும், பிறப்பு சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்த 4 பயனாளிகளுக்கு, உடனடி நடவடிக்கை மேற்கொண்டு பிறப்பு சான்றிதழ்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கலெக்டர் சதீஷ் கூறியதாவது: தர்மபுரி மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ், வரும் அக்டோபர் 3ம்தேதி வரை 176 முகாம்கள் நடைபெறவுள்ளது. இதில் ஜூலை மாதத்தில் 60 முகாம்கள், ஆகஸ்ட் மாதத்தில் 60 முகாம்கள் மற்றும் செப்டம்பர் மாதத்தில் 56 முகாம்கள் நடைபெறவுள்ளது. நகர்ப்புற பகுதிகளில் 33 முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 143 முகாம்களும் நடத்தப்பட உள்ளது. நகர்ப்புறங்களில் 13 துறைகளை சார்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளை சார்ந்த 46 சேவைகளும் வழங்கப்பட உள்ளது. கடந்த 8ம்தேதி முதல் இந்த முகாம்கள் நடைபெறும் பகுதிகளில், இத்திட்டம் குறித்த விழிப்புணர்வு பணிகள், விண்ணப்பம் மற்றும் அரசு வழங்கும் சேவைகளை பெறத்தேவையான தகுதிகள்/ஆவணங்கள் ஆகிய விவரங்கள் அடங்கிய தகவல் கையேட்டினை வீடு, வீடாக சென்று வழங்கும் பணியினை 1,373 தன்னார்வலர்கள் மேற்கொண்டனர்.
இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்களின் மீது, அதிகபட்சமாக 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். மின்சார துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, கூட்டுறவு துறை, மாற்றுத்திறனாளி நலத்துறை, சமூக நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, தொழிலாளர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான தனித்தனி அரங்குகள் அமைக்கப்பட்டு, பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்படுகிறது. இந்த மனுக்களை பதிவுசெய்து, அதற்கான ரசீது பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.தொடர்ந்து, தர்மபுரி ஒன்றியம், உங்கரானஅள்ளி சமுதாயக்கூடத்தில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை கலெக்டர் சதீஷ், தர்மபுரி எம்பி ஆ.மணி, தர்மபுரி எம்எல்ஏ வெங்கடேஷ்வரன் ஆகியோர் பார்வையிட்டு, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர். இதேபோல், பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம், கலப்பம்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர். முகாமில், பயனாளிகளுக்கு ஊரக வேலை உறுதி திட்ட அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது.
பின்னர், ஏரியூர் ஊராட்சி ஒன்றியம், அஜ்ஜனஅள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை கலெக்டர், எம்பி பார்வையிட்டு மனுக்களை பெற்றனர். இந்நிகழ்ச்சிகளில், தர்மபுரி மாவட்ட எஸ்பி மகேஸ்வரன், நகர்மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது, துணைத்தலைவர் நித்யா அன்பழகன், வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, மாவட்ட சமூக நல அலுவலர் கலாவதி, உதவி ஆணையர் (கலால்) நர்மதா, நகராட்சி ஆணையர் சேகர், தனித்துணை கலெக்டர் சுப்பிரமணியன், தாசில்தார்கள் சண்முகசுந்தரம், பிரசன்னமூர்த்தி, பிடிஓ லோகநாதன், திமுக நிர்வாகிகள் நாட்டான் மாது, ரேணுகா தேவி, காவேரி, சண்முகம், பெரியண்ணன், பச்சியப்பன், தங்கமணி, கவுதம், வக்கீல் அசோக்குமார், அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
The post மாவட்டத்தில் அக்.3 வரை 176 முகாம்கள் நடத்தப்படும் appeared first on Dinakaran.