மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்கவுள்ள கமல்ஹாசன், ரஜினியை சந்தித்து வாழ்த்து!

11 hours ago 1

சென்னை: மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்கவுள்ள நிலையில் ரஜினியை சந்தித்து கமல் வாழ்த்து பெற்றார். மாநிலங்களவை எம்.பி.யாக ஜூலை 25ம் தேதி கமல்ஹாசன் பதவியேற்கவுள்ளார். தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு தற்போது உறுப்பினர்களாக உள்ள அன்புமணி ராமதாஸ், மு.சண்முகம், என்.சந்திரசேகரன், மு. முகமது அப்துல்லா, பி.வில்சன், வைகோ ஆகியார் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது.

இதனையடுத்து திமுகவைச் சேர்ந்த பி.வில்சன், ராஜாத்தி (கவிஞர் சல்மா) , எஸ்.ஆர்.சிவலிங்கம், மநீம தலைவர் கமல்ஹாசன் மற்றும் அதிமுகவைச் சேர்ந்த ஐ.எஸ் இன்பதுரை, ம.தனபால் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவை ராஜ்ய சபா தேர்தலில் 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள மாநிலங்களவை எம்பிகள் ஜூலை 25ம் தேதி பதவியேற்கவுள்ளனர். அந்தவகையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் ஜூலை 25 அன்று நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், நடிகரும் தனது நெருங்கிய நண்பருமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். மாநிலங்களவை எம்.பியாக தேர்வு செய்யப்பட்டுள்ள கடிதத்தை ரஜினிகாந்திடம் கொடுத்து மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார். ரஜினியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, தனது எக்ஸ் தளத்தில் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்ததாவது; புதிய பயணத்தை நண்பர் ரஜினிகாந்த் உடன் பகிர்ந்தேன். மகிழ்ந்தேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

The post மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்கவுள்ள கமல்ஹாசன், ரஜினியை சந்தித்து வாழ்த்து! appeared first on Dinakaran.

Read Entire Article