மாவட்டத்தில் 68 கி.மீ நீளத்திற்கு ரூ.1.64 கோடியில் நீர்நிலைகள் தூர்வாரும் பணி

2 hours ago 1

*ராஜேஸ்குமார் எம்.பி., தொடங்கி வைத்தார்

ராசிபுரம் : நாமக்கல் மாவட்டத்தில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ், 68.05 கி.மீ நீளத்திற்கு ரூ.1.64 கோடியில் நீர்நிலைகள் தூர்வாரும் பணியை ராஜேஸ்குமார் எம்.பி., தொடங்கி வைத்தார்.
தமிழக நீர்வளத்துறை சார்பில், சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ், நாமக்கல் மாவட்டத்தில் 23 நீர் நிலைகளில் மொத்தம் 68.05 கி.மீ., நீளத்திற்கு தூர்வாரும் பணி நேற்று தொடங்கியது.

ராசிபுரம் தாலுகா, தேங்கல்பாளையம் கிராமத்திலுள்ள அத்தனூர் சின்னஏரியில் தூர்வாரும் பணிகளை, நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் ராஜேஸ்குமார் எம்.பி. தொடங்கி வைத்தார். அப்போது, அவர் பேசியதாவது:

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள பாசன வாய்க்கால்களில் உரிய நேரத்தில் கடைமடை வரை, தங்கு தடையின்றி சென்றடையவும், வெள்ளக்காலங்களில் விரைவில் தண்ணீர் வடிவதற்கும் ஏதுவாக, நீர்நிலைகளை தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 23 பணிகள், 68.05 கி.மீ நீளம் தூர்வார ரூ.1.64 கோடி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவதற்கு முன்பாக, இப்பணிகள் முடிக்கப்படும்.குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேட்டூர் கிழக்கு கரை வாய்க்காலில்(7 பணிகள்) 24.95 கி.மீ., நீளத்திற்கு ரூ.38.50 லட்சத்திலும், நாமக்கல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வரட்டாறு பகுதியில்(1 பணி) 1.90 கி.மீ., நீளத்திற்கு ரூ.8.00 லட்சத்திலும் தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாசன ஆறுகள் மற்றும் வாய்க்கால்களில்(6 பணிகள்) 17.05 கி.மீ., நீளத்திற்கு ரூ.48.15 லட்சத்திலும், ராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆறுகள், வாய்க்கால்களில்(7 பணிகள்) 18.00 கி.மீ., நீளத்திற்கு ரூ.52.60 லட்சத்திலும், திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆறுகள், வாய்க்கால்களில்(2 பணிகள்) 6.15 கி.மீ., நீளத்திற்கு ரூ.16.50 லட்சத்திலும் தூர்வார ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில், ராசிபுரம் தாலுகா தேங்கல்பாளையம் கிராமத்திலுள்ள அத்தனூர் ஏரி வழிந்தோடி வாய்க்கால் தூர்வாரும் பணி, ரூ.5.00 லட்சத்தில் நடைபெற உள்ளது. இந்த வாய்க்காலானது 1.50 கி.மீ நீளத்திற்கு தூர்வாரப்படவுள்ளது.

இதன் மூலம் 98.78 ஹெக்டேர் விவசாய நிலம் பாசன வசதி பெறும். வழிந்தோடி வாய்க்கால் தூர் வாருவதன் மூலம், ஏரிகளுக்கு நீரோட்டத்தை முழுமையாக கொண்டு செல்லவும், கரை உடைப்பு, வெள்ளநீர் வடிதல், நீர் விரயத்தை தடுக்கவும், நிலத்தடி நீர் மட்டம் உயர்த்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு ராஜேஸ்குமார் எம்.பி. பேசினார்.

இந்நிகழ்ச்சியில், அட்மா குழு தலைவர்கள் வெண்ணந்தூர் துரைசாமி, ராசிபுரம் ஜெகநாதன், அத்தனூர் பேரூராட்சி தலைவர் சின்னசாமி, துணைத்தலைவர் கண்ணன், ஆர்டிஓ சாந்தி, நீர்வளத்துறை செயற்பொறியாளர் அப்புசாமி, உதவி செயற்பொறியாளர்கள் பிரபு, விஜயகுமார் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post மாவட்டத்தில் 68 கி.மீ நீளத்திற்கு ரூ.1.64 கோடியில் நீர்நிலைகள் தூர்வாரும் பணி appeared first on Dinakaran.

Read Entire Article