கரூர், ஜன. 21: கரூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலிப்பணியிடங்கள் விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது. இதில், புதிதாக பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சாரா) பணியிடம் 01, தொகுப்பூதியம் ரூ. 27,804 என்ற அடிப்படையிலும், சிறப்பு சிறார் காவல் அலகிற்கு 02 சமூக பணியாளர் பணியிடம் ஒரு மாதத்திற்கு ரூ.18,536 தொகுப்பூதியமாகவும், ஒரு ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் மிஷன் வத்சல்யா வழிகாட்டு நெறிமுறைகளின்படி குறிப்பிட்ட தகுதிகளை கொண்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
அதன்படி, பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சாரா), 10.01.2025 அன்று 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். சமூகப் பணி சமூகவியல், குழந்தை வளர்ச்சி, மனிதி உரிமைகள் (பொது நிர்வாகம்), உளவியல், மனநலம், சட்டம், பொது சுகாதாரம், சமூதாய வள நிர்வாகம், இவற்றில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்புடன் பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி, சமூக நலன் பணிகளில் திட்டமிடல், நடைமுறைப்படுத்துதல், கண்காணிப்பு மற்றும் மேற்பார்வையிடுதலில் இரண்டு ஆண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தொகுப்பூதியம் ரூ. 27,804. சமூகப் பணியாளர், 10.01.2025 அன்று 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். சமூக பணி சமூகவியல், சமூக அறிவியல், ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், கணினி இயக்குவதில் திறன் இருக்க வேண்டும். குழந்தைகள் நலன் பணியில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தொகுப்பூதியம் ரூ. 18,536. இந்த விண்ணப்பங்கள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜனவரி 25ம்தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும். மேலும், விண்ணப்பங்களை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சாமி காம்ப்ளக்ஸ், ஆர்டிஒ அலுவலகம் எதிரே, கரூர் 639007. போன் 04324-296056. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு appeared first on Dinakaran.