மாவட்ட அளவில் தடகள போட்டிகள் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு

4 weeks ago 4

திருத்தணி: திருவள்ளூர் மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தடகளப் போட்டி திருத்தணியில் உள்ள தனியார் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதல் நாளில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து 11 குறு வட்டங்களைச் சேர்ந்த 120 அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலிருந்து 581 மாணவியர் கலந்துகொண்டனர். ஓட்ட பந்தயம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், டிரிபில் ஜம்ப் உள்ளிட்ட பல போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இதில் 14, 17, 19 வயது என 3 பிரிவிகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் தடகள போட்டிகளை தொடங்கிவைத்தார். இதில் திருத்தணி டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியன் மேற்பார்வையில் உடற்கல்வி இயக்குநர்கள் மற்றும் நடுவர்கள் முன்னிலையில் நடைபெற்ற போட்டியில் மாணவியர் பங்கேற்று தங்களது திறனை வெளிப்படுத்தினர்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியர் மாநில அளவில் நடைபெற உள்ள தடகள போட்டிகளில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டனர். போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்கள் பிடித்த மாணவியருக்கு தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கம் மற்றும் சான்றிதழ்களை திருத்தணி எஸ்.சந்திரன் எம்.எல்.ஏ வழங்கி பாராட்டினார்.

The post மாவட்ட அளவில் தடகள போட்டிகள் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு appeared first on Dinakaran.

Read Entire Article