ஒரு பெரியவர், 80 வயதாகிறது. அவர் ஒருமுறை சொன்ன செய்தி இது. அவருடைய மகன், மகள், மருமகன், பேரன் எல்லாம் பெரிய பதவிகளில் வசதியோடு இருக்கிறார்கள்.ஒருமுறை அவருடைய வீட்டுக்கு ஒரு பெரிய மகான் வந்தார். அவரிடத்திலே எல்லோரும் போய் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டார்கள். அப்பொழுது அந்த மகான் சொன்ன விஷயத்தைத்தான் இப்பொழுது நாம் நம்முடைய வாசகர்களிடம் பகிர்ந்து கொள்கிறோம். வயதில் மூத்தவர்கள், தம்மிலும் வயதில் குறைந்தவர்களை ஆசீர்வதிக்க வேண்டும் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால், ஏன் ஆசீர்வாதம் வாங்க வேண்டும்? அதில் என்ன சிறப்பு? என்பது பற்றி அதிகம் பேருக்குத் தெரியாது. தம்பி, அண்ணனிடம் ஆசீர்வாதம் வாங்குகின்றான். தம்பியும் அண்ணனும் சேர்ந்து அப்பா அம்மாவிடம் ஆசீர்வாதம் வாங்குகின்றார்கள். தம்பி, அண்ணன், அக்கா, அப்பா, அம்மா எல்லோரும் சேர்ந்து தாத்தா பாட்டியிடம் அல்லது பெரியம்மா பெரியப்பாவிடம் ஆசீர்வாதம் வாங்குகின்றார்கள்.
அந்தத் தாத்தாவும் சேர்ந்து மொத்த குடும்பமும், மகான்களிடம் ஆசீர்வாதம் வாங்குகிறது. இது முறை. அப்படி ஆசீர்வாதம் செய்கின்ற பொழுது, நல்வார்த்தைகள் நிரம்பிய ஒரு பாடலையோ அல்லது வடமொழி தெரிந்தவர்கள் ஒரு மங்கள ஸ்லோகத்தையோ அல்லது வேத மந்திரங்களில் உள்ள ஆசீர்வாதப் பத்ததிகளையோ சொல்லி ஆசீர்வாதம் செய்வார்கள். முனை முறியாத பச்சரிசி அதாவது அட்சதையைத் தூவி ஆசீர்வாதம் செய்வார்கள். மந்திரம் தெரியாவிட்டாலும், “நல்லா இரு, அமோகமாய் இரு, தீர்க்காயுசுடன் இரு, சௌக்கியமா இரு’’ என்று மனதார வாயார சொல்லி ஆசீர்வதிப்பார்கள். இதில் மனம் நிறைந்த ஆசிகள் வழங்குவது முக்கியம். சரி, வயதில் பெரியவர்களின் ஆசிகளுக்கு என்ன சக்தி இருக்கிறது? இதை ஒரு முறை அந்த மகான் ஒரு உதாரணத்தின் மூலம்
விளக்கினார்.
“வீட்டில் மாவடு வாங்குவீர்களா?’’ என்று அந்த மகான் கேட்டார். பெரியவர் சொன்னார்;
“ஆம், சுவாமி. மாவடு வாங்குவது உண்டு. மாதா ஊட்டாத சோற்றை மாங்காய் ஊட்டும் அல்லவா. அதனால் எப்பொழுதும் எங்கள் வீட்டில் மாவடு இருக்கும்’’
“அது சரி, மாவடு எப்படி வாங்குவீர்கள்?’’
“ஏன் தெருவில் கூடையில் கொண்டு வந்து விற்பார்கள் அல்லது கடைத்
தெருவில் கிடைக்கும்’’
“எப்படி வாங்குவீர்கள்?’’
“அரைப்படி, ஒரு படி என்று படியில் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இப்பொழுது கிலோ கணக்கு வந்துவிட்டது. கால் கிலோ, அரை கிலோ, ஒரு கிலோ என்று வாங்கலாம்’’
“ஒரு கிலோ மாவடு விலை என்ன?’’ (மகான்) இவர் என்ன நுணுக்கி நுணுக்கிக் கேட்கிறாரே, ஏதாவது மாவடு ஊறுகாய் போட்டு வியாபாரம் செய்யப் போகிறாரா? என்ற வியப்பு பெரியவருக்கு. இருந்தாலும் பதில் சொன்னார்.
“சீசனுக்குத் தகுந்த மாதிரி விலை இருக்கும். இப்பொழுது கிலோ மாவடு 50 ரூபாய்க்குக் கிடைக்கிறது’’ அடுத்து அந்த மகான் கேட்டார்;
“ஒரு கிலோவில் எத்தனை மாவடு இருக்கும்?’’
“பெரியதாக இருந்தால் 40, 45 இருக்கும். சின்னதாக இருந்தால் 60கூட இருக்கலாம். அது மாவடு அளவைப் பொருத்தது’’ இப்பொழுது அந்த மகான் கேட்டாராம்;
“அப்படியா சரி, இந்த மாவடுகளும் மாங்காய்களாக மாறி இருந்தால், 50 மாங்காயின் விலை எவ்வளவு இருந்திருக்கும்?’’
“கிட்டத்தட்ட 150 ரூபாய் இருக்கும்’’ என்று தோராயமாகச் சொன்னார். அடுத்து மகான் கேட்டார்;
“சரி இந்த மாங்காயும் கொஞ்ச நாளில் பழுத்தால் என்னவாகும்?’’
“மாம்பழமாக மாறும்’’
“இந்த 50 மாங்காய்களும் மாம்பழமாக மாறினால் என்ன விலைக்குப் போகும்?’’
“மாங்காயைவிட அதிக விலைக்குப் போகும்.’’ இப்பொழுது நிதானமாக அந்த மகான் சொன்னார்;
“மாவடு – இளம் மாங்காய் – பெரிய மாங்காய் – கனிந்த பழம்… இதிலிருந்து என்ன தெரிகிறது?’’
“நீங்களே சொல்லுங்கள் சுவாமி’’
“மாங்காய்க்கு வயது ஏற ஏற பக்குவம் மாறுகிறது. விலையும் மதிப்பும் ஏறுகிறது அல்லவா. மாவடுவாக இருந்தபோது என்ன விலையோ, அதைவிட பல மடங்கு மதிப்பு மாம்பழமாக ஆன பிறகு கூடிவிட்டது இல்லையா?’’
“ஆமாம். உண்மைதான்’’
“அதுபோலத்தான், வயது ஏறஏற ஆசீர்வாதத்திற்கும் மதிப்பும் பலமும் உண்டு. உங்களுக்கு 80 வயதாகிறது. 10 வயதில் இருந்து பூஜை செய்திருப்பீர்கள். எத்தனையோ ஸ்லோகம் மந்திரம் சொல்லி இருப்பீர்கள். அந்த சக்தி உங்களுக்கு இருக்கும் அல்லவா. அதனால் நீங்கள் ஒருவருக்கு ஆசி வழங்கும் போது அதன் சக்தியும் மதிப்பும் அதிகமாக இருக்கும்.அதனால்தான் வயதில் பெரியவர்களை வணங்கி ஒரு காரியத்தைத் தொடங்கும் முறையை நமது சடங்குகளில் வைத்திருக்கிறார்கள். எந்தச் சடங்காக இருந்தாலும் அதனுடைய முதல் காரியமாக “அனுக்ஞை’’ என்ற ஒரு விஷயத்தை வைப்பார்கள். அந்த அனுக்ஞை என்பது பெரியவர்களிடமும் ஞானத்தில் மூத்தவர்களிடமும் ஆசீர்வாதம் மற்றும் அனுமதி பெறும் முறை.
“அவர்கள் நீ செய்கின்ற காரியம் நன்றாக முடியட்டும்’’ என்று அட்சதை போட்டு வாழ்த்திய பிறகுதான் அந்த காரியத்தைச் செய்யத் தொடங்குவார்கள். வயது ஏறஏற தன்னைவிட வயதில் மூத்தவர்களிடம் வணங்கி ஆசீர்வாதம் பெற வேண்டும் என்கின்ற முறை வெகு நாட்களாக நம்முடைய மரபில் இருக்கிறது. மந்திர சக்தி நிறைந்த பெரியோர்கள், பூஜை செய்பவர்கள், ஞானவான்களிடம் ஆசிகள் பெற வேண்டும். துறவிகளிடம் ஆசீர்வாதம் பெற வேண்டும். 60 வயதில் சஷ்டியப்த பூர்த்தி சாந்தி செய்து கொள்வார்கள். 80 வயதில் சதாபிஷேகம் செய்து கொள்வார்கள்.இப்படி அபிஷேகம் செய்து கொள்பவர்கள் தன்னைவிட வயதில் மூத்தவர்களிடம் ஆசீர்வாதம் பெறுவதும், தன்னைவிட இளையவர்களுக்கு ஆசீர்வாதம் தருவதுமான நிகழ்ச்சி தான் நிறைவான நிகழ்ச்சியாக இருக்கும். குறிப்பாக, திருமணமாகி குழந்தை பேறு இல்லாதவர்கள், இந்த நிறை வாழ்க்கை வாழ்ந்த தம்பதிகளிடம் ஆசீர்வாதம் பெறுகின்ற பொழுது, அந்த வாழ்த்தானது பலித்து இவர்களுக்கு அந்தச் செல்வம் கிடைத்து விடும். தாம்பத்திய வாழ்க்கை நன்றாக இருக்கும்.எனவேதான் மணிவிழா, வெள்ளிவிழா போன்ற விசேஷங்கள் செய்து கொள்பவர்களிடம், வணங்கி ஆசீர்வாதம் பெறும் முறையை வைத்தார்கள். அது ஒரு கோயில் குடமுழக்கு விழாவில் கலந்து கொண்ட புண்ணியத்தைத் தரும்.இனியாவது, வயதில் பெரியவர் களைக் கண்டால் அவர்களிடம் ஆசிகள் பெறத்தவறாதீர்கள். அந்த ஆசிகளுக்கு ஒரு பெரிய மதிப்பும் சக்தியும் உண்டு. உங்கள் குழந்தைகளையும், பெரியவர்களைக் கண்டால் ஆசிகள் பெற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்துங்கள். அதனுடைய சக்தி அளப்பரியது. அது அனுபவத்தில்தான் தெரியும்.
The post மாவடு மகத்துவமும் பெரியவர்கள் ஆசீர்வாதமும் appeared first on Dinakaran.