பெங்களூரு,
மாலத்தீவு அதிபர் முகமது முய்சு மற்றும் அவரது மனைவி சஜிதா முகமது ஆகியோர் 4 நாள் பயணமாக இந்தியா வருகை தந்தனர். அதிபர் முகமது முய்சுவுக்கு மத்திய அரசு சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்தது. இதனைத் தொடர்ந்து முகமது முய்சு பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அதிபர் முகமது முய்சுவின் வருகை இருநாட்டு உறவின் புதிய அத்தியாயம் என்று கூறினார் பிரதமர் மோடி. மேலும் மாலத்தீவின் வளர்ச்சிக்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் மாலத்தீவுக்கு நிதி உதவிகளை வழங்க உறுதி அளித்துள்ள இந்திய அரசு, நாணய பரிமாற்ற ஒப்பந்தமும் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி அரசு முறை பயணமாக மாலத்தீவுக்கு வரவேண்டும் என அதிபர் முகமது முய்சு அழைப்பு விடுத்துள்ளார். அழைப்பை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி, மாலத்தீவுக்கு செல்ல ஒப்புதல் தெரிவித்துள்ளார். இதனிடையே இந்தியாவில் பல்வேறு இடங்களை மாலத்தீவு அதிபர் முகமது முய்சு மற்றும் அவரது மனைவி சஜிதா முகமது சுற்றிபார்த்தனர்.
அதனை தொடர்ந்து டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அவர்கள் பெங்களூரு வந்தனர். முகமது முய்சுக்கு கர்நாடக அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ராஜ்பவனுக்கு வந்த அவரை கவர்னர் தாவர்சந்த் கெலாட், முதல்-மந்திரி சித்தராமையா உள்ளிட்டோர் வரவேற்றனர்.
அன்றைய தினம் இரவு அவருக்கு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.அதன் பிறகு அவர் ரேஸ்கோர்ஸ் ரோட்டில் உள்ள தாஜ் வெஸ்ட் என்ட் நட்சத்திர ஓட்டலில் தங்கினார். பின்னர் இன்று முகமது முய்சு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் மாலத்தீவுக்கு புறப்பட்டு சென்றார். அவரை உயர்கல்வித்துறை மந்திரி எம்.சி.சுதாகர் தலைமையில் உயர் அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.
இந்தியா - மாலத்தீவு இடையான உறவில் கடந்த சில மாதங்களாக விரிசல் நிலவிய நிலையில் தற்போது மாலத்தீவு அதிபரின் வருகையும், பிரதமர் மோடி மாலத்தீவு செல்ல இருப்பதும் இருநாட்டு உறவுகளை வலுப்படுத்தும் என நம்பப்படுகிறது.