மாற்றுத்திறனாளி மாணாக்கர்களின் நலனுக்காக புதிய திறன் பயிற்சி மையம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு

1 month ago 5

சென்னை: மாற்றுத்திறனாளி மாணாக்கர்களின் நலனுக்காக சென்னை மைய பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரியில் புதிய திறன் பயிற்சி மையம் அமைக்க ரூ.50.லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தகவல் தெரிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகளின் நலனைப் பேணிக் காத்திட முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் இந்தியாவிலேயே முதல் முறையாக மாற்றுத்திறனாளிகளின் நல்வாழ்விற்காக தனித் துறையை உருவாக்கினார். மேலும், அவர்கள் உரிய மரியாதையுடன் அழைக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு “மாற்றுத்திறனாளிகள்” என்ற சொல்லையும் அறிமுகப்படுத்தினார்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வழியில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திரப் பராமரிப்பு உதவித் தொகை, பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன உதவி உபகரணங்கள், அரசு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணச் சலுகை மற்றும் பிற மாவட்டங்களுக்கு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் தனியாகவோ அல்லது துணையாளர் ஒருவருடனோ பயணம் செய்ய 75% பயண கட்டண சலுகை வழங்குவது என மாற்றுத்திறனாளிகள் சமுதாயத்தில் சுயமரியாதையுடனும், சம உரிமையுடனும் வாழ பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

தமிழ்நாட்டில் “எல்லோருக்கும் எல்லாம்” என்ற சூழலை உருவாக்கும் இலக்கை நோக்கிப் பயணிக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு, 2023-2024ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளபடி “செவித் திறன் குறைந்த மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி மாணாக்கர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பற்றவைத்தல், மின்னணுவியல் பாகங்களைத் தொகுத்தல், மின்னணுவியல் பலகைகளை பரிசோதித்தல் ஆகிய திறன்களில் பயிற்சி அளிப்பதற்காக சென்னை மைய பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் புதிய திறன் பயிற்சி மையம் அமைக்க உயர்கல்வித் துறையின் மூலம் ரூ.50.00 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த திறன் பயிற்சி மையத்தில் மின்கம்பியாளர் கட்டுப்பாட்டு பலகை எலக்ட்ரானியல் (Wireman control Panel Electronics), மின்கம்பிச்சுற்று காப்புப்பொருத்தும் செய்குநர் (Wiring Harness Assembly Operator) ஆகிய பாடப்பிரிவுகள் அமைக்கப்படவுள்ளது. 8ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்று, இரண்டு வருட படிப்பிற்கான தேசிய தரச்சான்றிதழ் (National Trade Certificate) பெற்ற மாற்றுத்திறனாளிகள் அதற்கு இணையாக இரண்டு வருட அனுபவம் உள்ள மாற்றுத்தினாளிகள் அல்லது 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளிகள் இந்த பாடப்பிரிவில் சேர்ந்து பயில தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

மேற்கண்ட இரு பாடப்பிரிவுகளிலும் தலா 6 மாத காலத்திற்குப் பயிற்சி வழங்கப்படும். ஒவ்வொரு பாடப்பிரிவிலும் தலா 30 மாற்றுத்திறனாளி மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதிக்கப்படுவார்கள். மாற்றுத்திறனாளிகளின் திறனை வெளிப்படுத்தும் வகையிலும், உயர்கல்வி பயில வேண்டும் என்ற அவர்களின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையிலும் இந்த திறன் பயிற்சி மையம் அமையும். மாற்றுத்திறனாளி மாணவர்கள் இத்திட்டத்தினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

The post மாற்றுத்திறனாளி மாணாக்கர்களின் நலனுக்காக புதிய திறன் பயிற்சி மையம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Read Entire Article