மாற்றுச் சிந்தனைகளே வெற்றிக்கு வழிவகுக்கும்!

2 weeks ago 6

ஒவ்வொருவர் வாழ்விலும் தொழிலோ, கல்வியோ, கண்டுபிடிப்போ எதுவாக இருந்தாலும் அதில் வெற்றி பெறுவதற்கு முதன்மையான தேவை புதுமையான சிந்தனைகள், வித்தியாசமான யோசனைகள் மட்டுமே. இவைகள்தான் இலக்கை நோக்கிச் செயல்படும் யாருக்கும் வெற்றியைப் பெற்றுத்தருகின்றன.

ஒரு பழமொழி உண்டு…. ‘‘சாதனையாளர்கள் வித்தியாசமான விஷயங்களைச் செய்வதில்லை, விஷயங்களை வித்தியாசமாகச் செய்கிறார்கள்.’’ மனிதனுக்கு என்றுமே வித்தியாசமான விஷயங்களில் ஈர்ப்பு அதிகம். நூறு கறுப்புக் காகங்களில் ஒரு வெள்ளைக் காகம் இருந்தால் அதன் மேல்தான் யாருக்குமே முழுக்கவனமும் செல்லும். அதனால் சாதாரண விஷயங்களையே அட! வித்தியாசமாய் இருக்கே என்று பிறர் சொல்வதுபோல் செய்து காட்டிவிட்டால் அங்கேயே நம்முடைய சிந்தனை, வெற்றியாக மாறிவிடுகிறது. இப்படி வித்தியாசமான ஐடியா எங்கிருந்து வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நம்முடைய மூளையில் பளிச்சிடலாம். உதாரணமாக, இன்று நம்முடைய வாழ்வை வசதியாக்கி வைத்திருக்கும் அனைத்துமே புதிய சிந்தனைகளால் வந்தவைதான். அப்படி ஒரு புதிய சிந்தனையால் இளம்தொழில் முனைவோராக உருவானவர் தான் சுரபி.

ராஜஸ்தானில் இருக்கும் சிறிய நகரம் லாவா. இங்கு மொத்த மக்கள்தொகை ஐந்து ஆயிரம் மட்டுமே. இங்குதான் சுரபி ஜெயின் பிறந்து வளர்ந்தார். அங்குள்ள அரசுப் பள்ளியில்தான் படித்தார். இவரது பள்ளியில் ஆசிரியர்களின் எண்ணிக்கையும் மிகவும் குறைவு. அறிவியல்,கணிதம் போன்ற முக்கியப்பாடங்களுக்குக் கூட ஆசிரியர்கள் இல்லை.அவருடைய ஊரில் டியூஷன் எடுக்கக் கூட ஆசிரியர் யாரும் இல்லை.

அதனால் சுரபி தானாகவே படிக்க முடிவு செய்தார்.பள்ளியில் நன்கு படிக்கும் மாணவியாக சுரபி உருவானார். பள்ளித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களும் பெற்றார். ஐஐடி-நுழைவுத் தேர்வு பயிற்சிக்கு அனுப்பவேண்டும் என்று சுரபியின் பெற்றோர் ஆசைப்பட்டார்கள். ஆனால், பெண்குழந்தையை ஏன் மேலும் படிக்க வைக்க வேண்டும் என்று சுற்றியிருந்தவர்கள் அனைவரும் படிப்பைத் தொடர எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எதிர்ப்புகளை எல்லாம் சமாளித்து ஐஐடி நுழைவுத் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்த மகளை ஐஐடி மும்பையில் சேர்த்தார்கள் சுரபியின் பெற்றோர். மெட்டலர்ஜிக்கல் என்ஜினியரிங் படிப்பைத் தேர்ந்தெடுத்துப் படித்தார் சுரபி. இவருடைய குடும்பம் பாரம்பரியமாகச் சுயதொழில் செய்யக்கூடிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

குடும்பத்தினர் அனைவரும் ஒன்றுகூடினால் தொழிலைப்பற்றித்தான் பேசுவார்கள். இவர்களுக்கு மத்தியில் வளர்ந்த சுரபிக்கு தொழில்முனைவோராக ஆர்வம் ஏற்பட்டதில் ஆச்சரியம் எதுவுமில்லை. ஐஐடி மும்பையில் சேர்ந்ததும் சுரபிக்கு தொழில்முனைவோராக இருந்த ஆர்வம் மேலும் அதிகரித்துள்ளது. பிடெக் முடித்த சுரபி வளாக நேர்காணலில் தேர்ந்தெடுக்கப்பட்டு பெரிய நிறுவனங்களில் பணிபுரிந்தார். இருந்தபோதும் தொழில்செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் பணியில் இருந்து வெளியேறினார். 2021ஆம் ஆண்டு சுரபி கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டார். தூக்கத்தைத் தொலைத்தார். அப்போது தான் தொழிலுக்கான புதிய சிந்தனையும் ஏற்பட்டது. தூக்கம் வராமல் தவிக்கும் மக்களுக்கு’Neend‘ என்கிற தூக்கத்திற்கு உதவும் செயலியை உருவாக்க முடிவு செய்தார்.

வீட்டில் எல்லோருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதனால் சுரபிக்கும் கொரோனா பாசிடிவ். அதற்கு முன்பு நன்றாக உறங்கக்கூடியவர். ஆனால்,கொரோனா பாதிப்பிற்குப் பிறகு அவருக்கு சரியாகத் தூக்கம் வராமல் தவித்துள்ளார். அப்போதுதான் தூக்கம் வராமல் தவிப்பவர்களின் கஷ்டம் சுரபிக்குப் புரிந்தது. அதனால் ஏற்படும் பிரச்னையின் தீவிரமும் புரிந்தது. இதற்குத் தீர்வு என்ன என்று யோசித்து ‘Neend’ என்ற செயலியை உருவாக்கினார்.

இந்த செயலி தூக்கம் வருவதற்கு உதவும் கதைகள்,இசை போன்றவற்றை வழங்குகிறது. தூக்கம் வராமல் போவதற்கு நிறைய காரணங்கள் இருக்கும்.ஒவ்வொருவருடைய காரணமும் மாறுபடும். உறங்கும் நேரத்தில் சொல்லக்கூடிய கதைகள், இசை, தியானம் போன்றவற்றைத் தனது செயலி மூலமாகக் கொடுக்கத் தொடங்கினார். ஏனென்றால், இவையெல்லாமே நம்மை ரிலாக்ஸ் செய்யும். நன்றாகத் தூங்குவதற்கு ரிலாக்ஸான மனநிலைதான் முக்கியம். தூக்கம் வராமல் தவிப்பதற்கான காரணம் எதுவாக இருந்தாலும் சரி, ‘Neend’ சரியான தீர்வைத் தந்து தூக்கம் வருவதற்கு உதவியது. அதனால் நல்ல வரவேற்பும் கிடைத்தது.

சுரபி பல்வேறு நிபுணர்களுடனும் இணைந்து Neend செயலிக்கான தொழில்நுட்பத்தை உருவாக்கியிருக்கிறார். தாய்மொழியில் ஒரு விஷயத்தைக் கேட்கும்போது மிகவும் கவனமாக கேட்கவேண்டிய அவசியம் இருக்காது. அதிகம் மெனக்கிடாமல் அதுவாகவே நம் மூளையில் பதிந்துவிடும் என்பதால் செயலியை தன்னுடைய தாய்மொழியில் மாற்றினார்.

இந்த செயலி ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் முதலில் சேவையளிக்கத் தொடங்கப்பட்டது. அவரவர் தாய்மொழியில் உள்ளடக்கம் இருப்பது நல்லது என்பதை நோக்கமாகக் கொண்டு மற்ற மொழிகளிலும் செயலியை உருவாக்க முடிவு செய்தார் சுரபி.

அவருடைய தீவிர முயற்சியால் மராத்தி,தமிழ், தெலுங்கு,பெங்காலி போன்ற மொழிகளில் செயலியை உருவாக்கி தன்னுடைய நிறுவனத்தை மேலும் வளர்ச்சி அடையச் செய்துள்ளார். இன்று சுரபி மாற்றுச் சிந்தனை மூலமாக வெற்றிபெற்ற இளம்பெண் தொழில்முனைவோராகத் திகழ்ந்து கொண்டிருக்கிறார். புதிய தொழில்நுட்பத்தின் மூலமாகத் தன்னுடைய செயலியை உருவாக்கி கதை, தியானம், இசை போன்றவற்றின் மூலமாக மக்களின் மனஅழுத்தத்தைப் போக்கி மனநிம்மதியுடன் உறங்குவதற்கு வழியை ஏற்படுத்தித் தரும் மகத்தான பணியைச் செய்து வரும் சுரபியின் வாழ்க்கை தொழில்முனைவோராக வேண்டும் என்ற இலக்குடன் வாழும் இளம்பெண்களுக்கு ஒரு முன் உதாரணமாகும்.

The post மாற்றுச் சிந்தனைகளே வெற்றிக்கு வழிவகுக்கும்! appeared first on Dinakaran.

Read Entire Article