மார்க்கெட்டிற்கு வரத்து குறைவால் தேங்காய் விலை கிடுகிடு உயர்வு

3 hours ago 2

*கிலோ ரூ.80க்கு விற்பனை

ஈரோடு : ஈரோடு மார்க்கெட்டுக்கு தேங்காய் வரத்து குறைந்ததை அடுத்து, கிலோவிற்கு ரூ.20 உயர்ந்து ரூ.80க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஈரோடு மார்க்கெட்டிற்கு காங்கயம், கோபி, அத்தாணி, அந்தியூர் மற்றும் பொள்ளாச்சி ஆகிய இடங்களில் இருந்து தினமும் 5 வாகனங்களில் இருந்து 30க்கும் டன் தேங்காய் விற்பனைக்கு வருகிறது. இந்நிலையில் தேங்காய் பயன்பாடு அதிகரித்திருப்பதாலும், அதன் விளைச்சல் பாதிக்கப்பட்டிருப்பதாலும், தேங்காயின் விலை உயர்ந்துள்ளது.

கடந்த சில நாட்களாக தேங்காய் ஒரு கிலோ சில்லரை விற்பனையில் ரூ.60க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், நேற்று மார்க்கெட்டில் ரூ.20 அதிகரித்து, ஒரு கிலோ ரூ.80க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் ஈரோடு புறநகர் பகுதிகளில் உள்ள சில்லரை வணிக கடைகளில் ஒரு கிலோ சின்ன தேங்காய் ரூ.60க்கும், பெரிய தேங்காய் ரூ.80க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து தேங்காய் வியாபாரிகள் கூறியதாவது, ‘பருவநிலை மாற்றம் காரணமாக, ஈரோடு மாவட்டத்தில் தேங்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, தென்னை மரங்களில் வெள்ளை ஈக்களின் தாக்கம் அதிகமாக காணப்படுவதாலும், விளைச்சல் குறைந்துள்ளது. அதோடு, வெளிநாடுகளுக்கும் அதிகளவில் தேங்காய் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இவை தவிர, கடந்த மே மாதத்தில் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் ரூ.234க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது லிட்டர் ரூ.396க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஈரோடு மார்க்கெட்டிற்கு தினசரி 30 டன் தேங்காய் வரத்தான நிலையில் தற்போது 20 டன்னாக குறைந்துள்ளது. இதனால் தேங்காய் விலை உயர்ந்துள்ளது.’’ இவ்வாறு வியாபாரிகள் தெரிவித்தனர்.

காய்கறிகள் விலை உயர்வு : ஈரோடு, வஉசி பூங்கா மைதானத்தில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை நடைபெற்று வருகிறது. இங்கு, சுமார் 700 கடைகள் உள்ளன. தாளவாடி திருப்பூர், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

இந்த நிலையில் கடந்த வாரத்தைவிட காய்கறிகள் அறுவடை குறைந்ததால் தற்போது மார்க்கெட்டுக்கு வரத்தும் குறைந்தது. அதன் எதிரொலியாக நேற்று மார்க்கெட்டில் ஒரு சில காய்கறிகளின் விலை கடந்த வாரத்தை விட கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை அதிகரித்துள்ளது. அதன்படி நேற்றைய விலை விவரம் (கிலோவில்) வருமாறு:

கேரட் ரூ.80, பீட்ரூட் ரூ.70, பீன்ஸ்- ரூ.100, முள்ளங்கி- ரூ.40, உருளைக்கிழங்கு- ரூ.60, சேனைக்கிழங்கு- ரூ.70, காலிப்பிளவர் ரூ.40, முட்டைகோஸ்-ரூ.30, கருப்பு அவரை- ரூ.100, பட்டைஅவரை- ரூ.60. மிளகாய்- ரூ.60, முருங்கைக்காய்- ரூ.80, கொத்தவரை- ரூ.60, இஞ்சி- ரூ.60, கத்திரிக்காய்- ரூ.80, வெண்டைக்காய்- ரூ.40, கோவக்காய்- ரூ.60, பீர்க்கங்காய்- ரூ.60, பாவக்காய்- ரூ.70, பெரிய வெங்காயம்- ரூ.40, சின்னவெங்காயம்- ரூ.40.

The post மார்க்கெட்டிற்கு வரத்து குறைவால் தேங்காய் விலை கிடுகிடு உயர்வு appeared first on Dinakaran.

Read Entire Article