*குன்னூர் வியாபாரிகள் திட்டம்
குன்னூர் : குன்னூர் மார்க்கெட் கடைகளை இடித்தால் அரசு வழங்கிய அனைத்து ஆதார், ரேஷன்,வாக்காளர் அட்டைகள் ஆகியவற்றை கலெக்டரிடமே ஒப்படைத்து விட்டு, குடும்பத்துடன் தொடர் உண்ணாவிரதம் போராட்டம் நடத்த வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சி மார்க்கெட்டில், 800க்கும் மேற்பட்ட நகராட்சிக்கு சொந்தமான கடைகள் உள்ளன. இவற்றை இடித்து விட்டு ரூ.41.50 கோடி மதிப்பீட்டில் புதிய கடைகள் கட்டும் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்ட நிலையில் அதற்கான பூமி பூஜை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு போடப்பட்டது.
இதனால் புதிய கடைகள் கட்டும் வரை வியாபாரிகளுக்கு நகராட்சி சார்பில், உழவர் சந்தை அருகே உர மேலாண்மை மையம் அமைத்த இடத்தில் தற்காலிகமாக காய்கறி கடைகள் கொண்டு வர நகராட்சி திட்டமிட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் தற்காலிக கடைகள் அமைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. இருப்பினும் உழவர் சந்தை பகுதியில் தற்காலிக கடை அமைத்தால் வியாபார ரீதியாக பெரும் பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் குன்னூர் பேருந்து நிலையத்திலிருந்து உழவர் சந்தை வரை செல்லும் சாலை மிகவும் குறுகிய சாலை என்பதால், மக்கள் அவ்வளவு தூரம் வந்து பொருட்கள் வாங்குவார்கள் என்பதில் நம்பிக்கை இல்லை என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.
மார்க்கெட் கடைகளை இடிப்பதற்கு பூமி பூஜை செய்வதை அறிந்த கடை வியாபாரிகள் நேற்று ஐ.யு.டி.பி காம்ப்ளக்ஸ் பகுதியில் ஒன்று கூடினர். பின் அனைத்து வியாபாரிகளிடம் தங்களது கருத்துக்களை கேட்டறிந்தனர்.
இறுதியாக கடைகளை இடித்தால், வியாபாரிகள் அனைவரும் ஒன்றிணைந்து அரசு சார்பாக வழங்கப்பட்ட ஆதார் அட்டை, ரேஷன் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்துவிட்டு, தங்களது குடும்பங்களுடன் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக தீர்மானம் நிறைவேற்றினர்.
இதனைத் தொடர்ந்து அனைத்து வணிகர்கள் சங்க நிர்வாகிகள் கூறுகையில் ”கடை இடிப்பு விவகாரம் குறித்து அனைத்து உறுப்பினர்களிடம் கருத்து கேட்டோம். அதில் வியாபாரிகள் இப்போதே நாங்கள் கடன் காரர்கள் ஆகிவிட்டோம்.
அடுத்த இரண்டு மாதத்தில் குழந்தைகளின் படிப்புக்கு பள்ளிக்கு கட்டணம் செலுத்த வேண்டும். வியாபாரம் ஆனால் தான் இதை எல்லாம் செய்ய முடியும். உழவர் சந்தையில் மாற்றிடம் வழங்கினால், எங்களால் ஒன்றும் செய்ய இயலாத நிலை ஏற்படும். வெளியில் கடன் கேட்டாலும் கடை இடிப்பை காரணம் காட்டி, கடன் தர மறுக்கிறார்கள் என அனைத்து உறுப்பினர்களும் தெரிவித்தனர்.
இதனால் நாங்கள் அனைவரும் ஒன்றினைந்து அனைத்து தரப்பினரிடம் ஆதரவை கேட்டு மிகப்பெரிய அளவிலான கடையடைப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
அதனை தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டம், மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்” என தெரிவித்தனர். வியாபாரிகள் கூட்டத்தை நடத்தி கொண்டிருக்கும் போதே நகராட்சி அதிகாரிகள் வாடகை நிலுவை வைத்துள்ள வியாபாரிகளின் கடைகளுக்கு சீல் வைத்த சம்பவம் வியாபாரிகளின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
The post மார்க்கெட் கடைகளை இடித்தால் குடும்பத்துடன் உண்ணாவிரதம் appeared first on Dinakaran.