மாமூல் பெறுவதை அதிகாரிகளிடம் தெரிவித்த கார் டிரைவருக்கு பெண் இன்ஸ்பெக்டர் சரமாரி செருப்படி

3 hours ago 2

திருமலை: ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் கல்யாணதுர்கா பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் ஹசினாபானு(35). இவர் தனது தனிப்பட்ட தேவைக்காக கார் வைத்துள்ளார். அந்த காரில் தினசரி போலீஸ் நிலையத்திற்கு வருவது வழக்கம். இவரிடம் கடந்த 2 ஆண்டுகளாக அதேபகுதியை சேர்ந்த நானி(27) என்பவர் டிரைவராக பணிபுரிகிறார். நானிக்கு அங்கிருந்த அனைத்து போலீசாரும் பழக்கம் என்பதால் அவர்களது சொந்த வேலைகளையும் சேர்த்து செய்து வந்தார்.

இதனிடையே இன்ஸ்பெக்டர் ஹசினாபானு பலரிடம் தனது டிரைவர் நானியை அனுப்பி மாமுல் வாங்கி வர செய்வாராம். ஆனால் இதற்கு விருப்பம் இல்லாவிட்டாலும் இன்ஸ்பெக்டர் ஹசினாபானுவின் தொந்தரவால் அந்த மாமூல் வாங்கி வந்துள்ளார். இதனிடையே கடந்த 2 நாட்களுக்கு முன் கர்நாடகாவில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டது. இதை ஹசினாபானு மடக்கி பிடித்தார். அவற்றை விடுவிக்க சில லட்சங்களை பெற்றதாக தெரிகிறது.

இதனை பார்த்த டிரைவர் நானி, கலால்துறை உயர் போலீசாருக்கு தெரிவித்துள்ளார். அதன்பேரில் நேற்றுமுன்தினம் போலீஸ் நிலையத்திற்கு வந்த உயரதிகாரிகள், ஹசினாபானுவிடம் விசாரித்தனர். தன்னை பற்றி டிரைவர் நானி, ரகசிய புகார் கொடுத்ததை அறிந்து ஆவேசமடைந்த ஹசினாபானு, செருப்பை கழற்றி உயரதிகாரிகள் முன்னிலையில் டிரைவரை `பளார் பளார்’ என அறைந்தார். இதை அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்து இணையதளங்களில் வைரலாக்கியுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடக்கிறது.

 

The post மாமூல் பெறுவதை அதிகாரிகளிடம் தெரிவித்த கார் டிரைவருக்கு பெண் இன்ஸ்பெக்டர் சரமாரி செருப்படி appeared first on Dinakaran.

Read Entire Article