மாமல்லபுரம் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியீடு

3 hours ago 1

மாமல்லபுரம், பிப்.8: மாமல்லபுரம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இதில், 18 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு, கடந்த 7ம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்கள் செதுக்கிய புராதன சின்னங்களும், 108 வைணவ தலங்களில் 63வது தலமாக விளங்கும் தலசயன பெருமாள் கோயிலும் உள்ளன. இதேபோல், சுற்றுலா அலுவலகம் டிஎஸ்பி அலுவலகம், அனைத்து மகளிர் காவல் நிலையம், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக விடுதி, சட்டம், ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல் நிலையங்கள், அரசு கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை கல்லூரி, பூம்புகார் அலுவலகம், ஆளவந்தார் அறக்கட்டளை அலுவலகம், நெடுஞ்சாலைத்துறை அலுவலகம், தொல்லியல் துறை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ளன.

இங்கு, அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு ஏதுவாக மாமல்லபுரம் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என பொதுமக்கள் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த, 2023ம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் மாமல்லபுரம் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில், மாமல்லபுரம் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நகராட்சி எல்லைக்குள் மாமல்லபுரத்தில் ஏற்கனவே உள்ள 15 வார்டுகள் மற்றும் பட்டிப்புலம், வடகடம்பாடி, கடம்பாடி, நெம்மேலி, வட நெம்மேலி, திருவிடந்தை ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பகுதிகள் இணைக்கப்பட உள்ளதாகவும், பேரூராட்சி பகுதியில் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் விவரம் கணக்கெடுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post மாமல்லபுரம் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Read Entire Article