மாமல்லபுரம் அடுத்த பட்டிப்புலத்தில் இசிஆர் சாலையில் உடைந்து கிடக்கும் பேரிகார்டு

4 days ago 4

ECR, Barrycad* வாகன ஓட்டிகள் அச்சம்
* நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

மாமல்லபுரம் : மாமல்லபுரம் அடுத்த பட்டிப்புலம் இசிஆர் சாலையில் ஆபத்தான முறையில் உடநை்து கிடக்கும் பேரிகார்டால் விபத்து ஏற்படும் என வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும், இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.மாமல்லபுரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீபகாலமாக சாலை விபத்துகளும், அதன் காரணமாக உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. குறிப்பாக, சாலைகளில் வாகனங்களின் அதிவேகம் காரணமாக பல விபத்துகள் நடந்து வருகிறது. இச்சாலைகள், அதிக வளைவுகள் மற்றும் மேடு பள்ளங்களையும் கொண்டுள்ளது.

குறிப்பாக, ஓஎம்ஆர் சாலை பல ஆபத்தான வளைவுகளை கொண்டுள்ளது. இப்பகுதிகளில், மிகவும் கவனமாக வேகத்தை குறைத்து செல்லாவிட்டால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. சாலை, விதிகளை பலரும் மதிக்காததும், அதிவேகமாக வாகனங்களில் செல்வதும் பெருமளவில் விபத்துக்கு காரணமாகின்றன. இதில், பல இளைஞர்கள் அதிக திறன் கொண்ட பைக்குகளில் கண்மூடித்தனமாக பறக்கின்றனர்.

இவர்கள், தங்களை குறித்தோ, குடும்பம் மற்றும் சாலையில் செல்லும் பிற பயணிகள் குறித்தோ எவ்வித கவலையும் இன்றி ‘ஸ்பீடு டிரைவிங்’ செய்து விலை மதிப்பில்லாத இன்னுயிர் பிரிய காரணமாகி விடுகின்றனர்.

அதிக விபத்து பகுதிகள், ஆபத்தான வளைவுகள், குறுகலான இடங்களில் வேகத்தை குறைக்கும் வகையில் தடுப்புகள் மற்றும் சென்டர் மீடியன்கள் வைப்பதோடு, வாகனங்கள் செல்ல வேண்டிய அதிகபட்ச வேகம் குறித்த அறிவிப்பு பலகைகளையும் வைத்திருக்க வேண்டும். ஆனால், சில இடங்களில் இது போன்று அறிவிப்பு பெயர் பலகைகள் வைக்கப்படாமல் உள்ளது.

இந்நிலையில், இசிஆர் மற்றும் ஓஎம்ஆர் சாலையில் விபத்து எண்ணிக்கையை குறைக்கும் வகையில், வாகனங்களின் வேகத்தை குறைத்து பாதுகாப்பாக செல்ல தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என செங்கல்பட்டு எஸ்.பி. சாய்பிரனீத் போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து, மாமல்லபுரம் சட்டம் ஒழுங்கு மற்றும் டிராபிக் போலீசார் சார்பில், பல மாதங்களுக்கு முன்பு மாமல்லபுரம் இசிஆர் நுழைவு வாயில், பூஞ்சேரி சந்திப்பு, சால்வான் குப்பம், பட்டிப்புலம், திருவிடந்தை உள்ளிட்ட பகுதிகளில் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டது. இதனால், மேற்கண்ட பகுதிகளை கடந்து செல்லும் போது வாகன ஓட்டிகள் வேகத்தை குறைத்து சாலைகளில் கவனமாக சென்றனர்.

இந்நிலையில், பட்டிப்புலம் இசிஆர் சாலையில் நடுவில் வைக்கப்பட்ட பேரிகார்டு ஒன்று துருப்பிடித்து சில தினங்களுக்கு முன்பு முறிந்து விபத்து ஏற்படுத்தும் வகையில் சாலை நடுவே அனாதையாக கிடக்கிறது. மேலும், இரவு நேரங்களில் பயணிக்கும் வாகனங்கள் சாலையில் கிடக்கும் பேரிகார்டில் மோதி விபத்தில் சிக்குகின்றன. இதனால், வாகன ஓட்டிகள் ஒரு வித அச்சத்துடன் அப்பகுதியை கடந்து செல்கின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு பெரிய விபத்து ஏற்படுவதற்கு முன்பு, துருபிடித்து சாலையில் முறிந்தும், உடைந்தும் கிடக்கும் பேரிகார்டை உடனடியாக அகற்றி புதிய பேரிகார்டு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

The post மாமல்லபுரம் அடுத்த பட்டிப்புலத்தில் இசிஆர் சாலையில் உடைந்து கிடக்கும் பேரிகார்டு appeared first on Dinakaran.

Read Entire Article