செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரையில் சர்வதேச புரோ பீச் வாலிபால் போட்டி நடைபெற்று வருகிறது. 13 ஆண்டுகளுக்குப் பிறகு மாமல்லபுரத்தில் வைத்து நடைபெறும் இந்த தொடரை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இன்று முதல் 24ம் தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் இந்த போட்டிகள் நடைபெற உள்ளது. 4 நாட்கள் நடக்கும் இத்தொடரில் 20-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர்.
புரோ பீச் வாலிபால் போட்டி தொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "சர்வதேச புரோ பீச் வாலிபால் தொடர் போட்டிகளை மாமல்லபுரத்தில் துவங்கி வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மதிப்புமிக்க போட்டியில் 20க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். மேலும் இப்போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 6 வீரர்கள் இந்தியா சார்பில் பங்கேற்பது எங்களுக்கு பெருமை அளிக்கிறது. இதில், SDAT மூலம் பயிற்சி பெற்ற 2 பெண் வீராங்கனைகளும் பங்கேற்கின்றனர். இந்த உற்சாகமான நிகழ்வில் தங்கள் முத்திரையை பதித்து, அனைத்து வீரர்களும் தங்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, சிறந்த வெற்றியை பெறுவார்கள் என்றும் நம்புகிறேன்." என்று தெரிவித்துள்ளார்.