மாமல்லபுரத்தில் 2 நாட்களுக்கு பிறகு அலையில் மாயமான பக்தர் சடலம் கரை ஒதுங்கியது

22 hours ago 1

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன் கடலுக்குள் இறங்கி குளித்த கர்நாடகாவை சேர்ந்த 3 பக்தர்களை ராட்சத அலை இழுத்து சென்றது. இதில் 2 பேரை அன்றைய தினமே உயிர் காப்பாளர் பத்திரமாக மீட்டார். மேலும் 3வது பக்தரை தேடும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், நேற்றிரவு அலையில் மாயமான 3வது பக்தரின் சடலம் கரை ஒதுங்கியது. கர்நாடகா மாநிலம், கோலார் மாவட்டம், புராலம் கிராமத்தை சேர்ந்த 75 பக்தர்கள், கடந்த 27ம் தேதி ஒரு சுற்றுலா பேருந்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். பின்னர், அவர்கள் சுற்றுலா பேருந்து மூலம் மாமல்லபுரத்துக்கு வந்தனர். இங்கு பல்வேறு புராதன சின்னங்களை சுற்றி பார்த்துவிட்டு, கர்நாடகாவை சேர்ந்த 75 பக்தர்களும் கடலுக்குள் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். அப்போது ராட்சத அலை எழும்பி, அங்கு குளித்து கொண்டிருந்த நவீன் (24), ரஞ்சித் (26), முரளி (25) ஆகிய 3 பேரையும் நடுக்கடலுக்கு இழுத்து சென்றது.

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த உயிர் காப்பாளர் கிருஷ்ணராஜ் (48) உடனடியாக கடலுக்குள் குதித்து, நடுக்கடலுக்கு இழுத்து செல்லப்பட்ட 3 பேரில் ரஞ்சித், முரளி ஆகிய 2 பக்தர்களையும் மிதவை உதவியுடன் காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தார். இதில் ராட்சத அலையில் சிக்கி மாயமான நவீன் என்பவரை கடந்த 2 நாட்களாக மாமல்லபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் இன்பராஜ் தலைமையில், முதன்மை தீயணைப்பாளர்கள் வெங்கடகிருஷ்ணன், ரமேஷ்பாபு உள்பட 7 தீயணைப்பு வீரர்கள் நடுக்கடலுக்கு படகுகள் மூலம் சென்று தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். எனினும், அலையில் சிக்கி மாயமான நவீன் குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.
பின்னர், சென்னையில் உள்ள ஆழ்கடலில் மூழ்கி தேடும் கமாண்டோ வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, சென்னை தீயணைப்பு அலுவலர் எழில்வேந்தன் தலைமையில் 8 பேர் கொண்ட கமாண்டோ வீரர்கள், மாமல்லபுரம் தீயணைப்பு வீரர்களுடன் இணைந்து, கடந்த 2 நாட்களாக பல்வேறு நவீன பாதுகாப்பு உபகரணங்களுடன் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். எனினும், அவர்களால் நவீனின் சடலத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், மாமல்லபுரம் கடற்கரை கோயில் அருகே நேற்றிரவு அலையில் சிக்கியமான நவீனின் உடல், முகம் சிதைந்த நிலையில், அலையால் அடித்து வரப்பட்டு கரை ஒதுங்கியது. அச்சடலத்தை அங்கு தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் கண்டறிந்து மீட்டனர். இதுகுறித்து தகவறிந்ததும் மாமல்லபுரம் போலீசார் விரைந்து வந்தனர். அங்கு முகம் சிதைந்த நிலையில் இருந்த கர்நாடக பக்தர் நவீனின் சடலத்தை கைப்பற்றினர். பின்னர் அச்சடலத்தை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

The post மாமல்லபுரத்தில் 2 நாட்களுக்கு பிறகு அலையில் மாயமான பக்தர் சடலம் கரை ஒதுங்கியது appeared first on Dinakaran.

Read Entire Article