விருதுநகர், ஜன.30: மாமரங்களை நடவு செய்துள்ள விவசாயிகள் கவாத்து செயல்முறையினை கடைபிடித்து அதிக மகசூல் பெறலாம் என தோட்டக்கலைத்துறையினர் ஆலோசனை வழங்கி உள்ளனர். மா பல சத்துக்கள் நிறைந்த பழப்பயிராகும். தேவையான உரங்களை தக்க சமயத்தில் அளித்து நன்கு கவனித்தால் நல்ல மகசூல் கிடைக்கும். இந்நிலையில் மா மரத்தில் ஊட்டச்சத்து மேலாண்மை மற்றும் கவாத்து செய்தல் தொடர்பாக தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கவாத்து என்பது பக்க கிளைகளை வெட்டி ஒழுங்குபடுத்துவதாகும். கவாத்து செய்வதன் முலம் புதிய கிளைகள் மற்றும் பூ மொட்டுக்களை துளிர்க்க செய்து அதிக மகசூலை பெற முடியும்.
மாமரத்தில் கவாத்து செய்வதை வயதின் அடிப்படையில் 3 பிரிவுகளாக பிரிக்கலாம். ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் மா மரங்களில் கவாத்து செய்யப்பட வேண்டும். முதன்முறையில் குறுக்கும் நெடுக்குமாக உள்ள கிளைகள், ஒன்றுக்குள் ஒன்றாக செல்லும் கிளைகள், நோய் தாக்கிய மற்றும் காய்ந்த கிளைகள் வெட்டப்பட வேண்டும். இவ்வாறு கிளைகளை சீரமைப்பதன் மூலம் சூரிய வெளிச்சம் மற்றும் காற்று உள்ளே உள்ள கிளைகளுக்கு கிடைக்கும். இதனால் மரம் நன்றாக வளர்ந்து பூ பூத்து காய் பிடிக்க ஏதுவாகிறது. இம்முறையில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கவாத்து செய்தால் போதும். 2வது முறையில் மரத்தின் மேல்பரப்பில் உள்ள நெருக்கமான தண்டுகளை குறைத்து சூரிய ஒளியை நன்கு உட்புகச்செய்வதன் மூலம் பூத்தல், காய்த்தல் போன்ற தாவர செயல்பாடுகள் ஊக்குவிக்கப்படுகின்றன.
பொதுவாக நன்கு விளைச்சல் தரும் மாமரங்களில் 25% கடந்த வருட கிளைகளை நீக்க வேண்டும். வயதான மற்றும் உற்பத்தி குறைந்த மரங்களில் 30% முதல் 40% கிளைகளை அகற்றுவதால் புதிய கிளைகள் ஊக்குவிக்கப்பட்டு நல்ல மகசூல் கிடைக்கும். 5 ஆண்டுகளுக்கு மேற்பட்ட மாமரம் ஒன்றுக்கு 50 கிலோ தொழுஉரம், 2.2 கிலோ யூரியா, 6.25 கிலோ சூப்பர் பாஸ்பேட், 2.5 கிலோ பொட்டாஷ் உரங்களை செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இடவேண்டும். உரத்தை மரத்தின் தண்டு பகுதியில் இருந்து 45 முதல் 90 சென்டிமீட்டர் தூரத்தில் 15 சென்டிமீட்டர் ஆழத்தில் நன்றாக கலந்து இட வேண்டும். எனவே, மாமரங்களை நடவு செய்துள்ள விவசாயிகள் கவாத்து செயல்முறையினை கடைபிடித்து அதிக மகசூல் பெறலாம். இவ்வாறு கூறினர்.
The post மாமரங்களில் அதிக மகசூலுக்கு கவாத்து அவசியம்: தோட்டக்கலைத்துறை அட்வைஸ் appeared first on Dinakaran.