மாமண்டூர்-நரசமங்கலம் குடைவரைகள்

3 weeks ago 6

நம் முன்னோர்களின் திறமைகளை இன்றும் பிரதிபலிக்கும் வரலாற்றுச் சின்னங்கள் காலத்தால் அழியாத கற்சிற்பங்களாகவும், குடைவரைக் கோயில்களாகவும், பாறை ஓவியங்களாகவும் இருந்துவருகின்றன. அவற்றில் ஒன்றுதான் காஞ்சிபுரம் அருகே உள்ள மாமண்டூர்-நரசமங்கலம் குன்றுத்தொடரில் அமைந்துள்ள குடைவரைகள். இக்குன்றுத்தொடரிடையே ஓடும் ஓடையினை எல்லையாகக்கொண்டு இத்தொடர், மாமண்டூர் மற்றும் நரசமங்கலம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது மாமண்டூர் குடைவரைகள்.

நரசமங்கலம் எல்லையிலுள்ள முற்றுப்பெறாத சிறிய குடைவரையும், முற்றுப்பெறாத பெரிய குடைவரையும் தனித்தனியே குன்றுகளில் அமையப் பெற்றுள்ளன. பெரிய குடைவரை அமைந்துள்ள குன்று சிறிய குடைவரை அமைந்துள்ள குன்றினை விட அளவில் சற்றுப் பெரியதாகும். மாமண்டூர் எல்லையிலுள்ள வடக்கு குடைவரையும், ருத்ர வாலீஸ்வரமும் குன்றின் சரிவில் அமையப் பெற்றுள்ளன. நான்கு குடைவரைகளிலும் முகப்புக் கூரை பகுதிகளாக உத்திரமும், வாஜனமும் அமையப் பெற்றுள்ளன. இந்நான்கு குடைவரைகளின் கருவறையின் முன்சுவர்கள் நான்முக அரைத் தூண்களைப் பெற்றுள்ளன. முதற் குடைவரை முகப்புத் தூண் வரிசையை அடுத்து நீள் சதுரவடிவில் முகமண்டபமும், பின்சுவரில் மூன்று கருவறைகளுக்கான அமைப்பும் காட்டப்பட்டுள்ளது. இரண்டாம் குடைவரை இந்நான்கு குடைவரைகளுள் அளவில் பெரியதாகும். முகமண்டபம், அர்த்தமண்டபம், கருவறை ஆகிய பகுதிகளைக் கொண்டது.

இக்குடைவரையின் சிறப்பாக கருவறைகள் அமைப்பினைக் கூறலாம். முகமண்டபத்தின் தென் மற்றும் வட புறங்களில் இரண்டு கருவறைகளும், அர்த்தமண்டபத்தின் பக்கத்திற்கொன்றாக இரண்டு கருவறைகளும், அர்த்தமண்டபப் பின்சுவரில் ஐந்து கருவறைகளும் ஆக மொத்தம் ஒன்பது கருவறைகளைக்கொண்டு அமையப் பெற்றுள்ளது இதன் சிறப்பாகும். மூன்றாவது குடைவரை, முகப்பு, முகமண்டபம், அர்த்தமண்டபம், கருவறைகள் ஆகிய கூறுகளைப் பெற்றுள்ளது. மூன்று கருவறைகளும் அர்த்தமண்டபப் பின்சுவரில் அமைந்துள்ளன.

இக்குடைவரையில் முதலாம் ராஜராஜனின் கல்வெட்டு ஒன்றும், பரகேசரிவர்மனின் கல்வெட்டு ஒன்றும் காணப்படுகிறது. நான்காம் குடைவரை முகப்பு, முகமண்டபம், கருவறை ஆகிய அமைப்புகளை உடையது. அர்த்தமண்டபம் இன்றி முகமண்டபத்தின் பின் சுவரில் ஒரு கருவறை அமைந்துள்ளது. இந்நான்கு குடைவரைகளுள் வடக்குக் குடைவரைத் தூண்களில் மட்டுமே தாமரைப் பதக்கங்கள் செதுக்கப்பட்டுள்ளன. முகமண்டபத் தென்சுவரில் மகேந்திரவர்மனின் கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. முதலாம் மகேந்திரவர்மனின் பல்வேறு கலைமுயற்சிகளில் மாமண்டூர் – நரசமங்கலம் குடைவரைகள் தனித்ததொரு சிறப்பிடத்தைப் பெற்றுத் திகழ்கின்றன.

The post மாமண்டூர்-நரசமங்கலம் குடைவரைகள் appeared first on Dinakaran.

Read Entire Article