கூடலூர்: மான் வேட்டையின்போது துப்பாக்கி குண்டு பாய்ந்து வாலிபர் பலியானார். இதுதொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கூடலூரை அடுத்த தேவர் சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட 3வது டிவிஷன் பகுதியில் வசித்தவர் ஜெம்சிர் (37). இவர் கடந்த 25ம் தேதி அதிகாலை காட்டு யானை தாக்கி இறந்ததாக அவரது நண்பர்கள் கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். இது குறித்து விசாரணை நடத்திய வனத்துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்ததில் யானைகள் நடமாடியதற்கான தடயங்கள் இல்லை. இதையடுத்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், 24ம் தேதி இரவு 4 நண்பர்களுடன் ஜெம்சீர் வெளியில் சென்றதும் மறுநாள் காலை வரை வீட்டுக்கு வராததும் தெரியவந்தது.
பிரேத பரிசோதனையில் வயிற்றில் ஏற்பட்ட காயம் துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் ஏற்பட்டது என தெரிய வந்துள்ளது. இதையடுத்து தொடர்புடைய 13 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் மான் வேட்டையின்போது தவறுதலாக ஜெம்சிரின் உடலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்ததும், அதை மறைக்க உடலை எடுத்து வந்து தேயிலைத்தோட்டத்தில் போட்டு, யானை தாக்கி இறந்ததாக நாடகமாடியதும் தெரியவந்தது. இதையடுத்து 3 நாட்டு துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கொலை வழக்கில் நவ்ஷாத், ஜாபர், சதீஷ், ஹைதர் அலி ஆகியோரும், உடந்தையாக இருந்ததாக 9 பேரும் கைது செய்யப்பட்டனர்.
The post மான் வேட்டையில் குண்டு பாய்ந்து வாலிபர் பலி: 13 பேர் பிடிபட்டனர் appeared first on Dinakaran.