மானூர்,ஏப்.29: மானூர் அருகே தந்தையின் எதிர்ப்பையும் மீறி மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் விரக்தியில் பரோட்டா மாஸ்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் மாப்பிள்ளை வீட்டை அடித்து நொறுக்கினர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மானூர் அருகேயுள்ள தெற்கு வாகைக்குளத்தைச் சேர்ந்தவர் முப்பிடாதி (45). இவர் அப்பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு சுபா (18) என ஒருமகளும், இரு மகன்களும் உள்ளனர். இவர்களில் கல்லூரி ஒன்றில் முதலாமாண்டு படித்து வரும் சுபா, தெற்கு வாகைகுளத்தில் வசித்து வரும் சுப்பையாவின் மகன் முத்துக்குமார் (25) என்பவரை காதலித்து வந்தாராம்.
இதற்கு முத்துக்குமார் வீட்டில் சம்மதம் தெரிவித்த போதிலும் முப்பிடாதி எதிர்ப்பு தெரிவித்து வந்தார். அத்துடன் இதுகுறித்து மானூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், இருதரப்பையும் சமரசம் செய்து அனுப்பிவைத்தனர். ஆனால், முப்பிடாதியின் மகள் தந்தையின் எதிர்ப்பையும் மீறி தனது காதலுனுடன் வீட்டை விட்டு நேற்று முன்தினம் வெளியேறியதாக தெரிகிறது. இதையடுத்து காதலர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதனால் மனமுடைந்த முப்பிடாதி ஆலங்குளம் அருகே ஊத்துமலை அடுத்த ரெட்டியார்பட்டி பஜாரில் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து மயங்கினார். அவ்வழியாக சென்றவர்கள் இதைப் பார்த்து ஊத்துமலை போலீசாருக்கு தகவல் ெதரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், முப்பிடாதியை மீட்டு உக்கிரன்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு முப்பிடாதியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து இதுகுறித்து ஊத்துமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே முப்பிடாதியின் தற்கொலையால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் தெற்கு வாகைக்குளத்தில் உள்ள மாப்பிள்ளையின் வீட்டிற்கு சென்று அங்கிருந்த டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை அடித்து உடைத்து சேதப்படுத்தினர். இதுகுறித்து தகவலறிந்ததும் மானூர் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அசம்பாவிதம் எதுவும் நடக்காமல்பொருட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
The post மானூர் அருகே பரபரப்பு மகள் காதல் திருமணம் செய்ததால் தந்தை விஷம் குடித்து தற்கொலை appeared first on Dinakaran.