மதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே மேலபிடாவூர் கிராமத்தைச் சேர்ந்த ராமன், செல்லம்மாள் தம்பதி மகன் அய்யாசாமி (19). சிவகங்கை அரசு கல்லூரி மாணவர். புல்லட் பைக்கை ஓட்டிச் சென்றது தொடர்பாக அதே கிராமத்தை சேர்ந்த 3 இளைஞர்கள் ஆயுதங்களால் இவரை தாக்கி கைகளில் வாளால் வெட்டினர். இதில் படுகாயமடைந்த அய்யாசாமி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தாக்குதல் சம்பவம் குறித்து விசாரிக்க, தேசிய எஸ்சி-எஸ்டி ஆணைய இயக்குனர் ரவிவர்மன் தலைமையிலான குழுவினர், மேலபிடாவூர் கிராமத்திற்கு நேற்று வந்தனர்.
அங்கு சம்பவம் நடந்த பகுதிகளை நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். பின்னர், சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித், எஸ்பி ஆஷிஷ் ராவத் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவரின் குடும்பத்திற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் தீர்வு உதவித்தொகையாக ரூ.62,500 வழங்கப்பட்டது. மேலும் மேலபிடாவூர் கிராமத்தை சுற்றியுள்ள ஆதிதிராவிடர் மக்களுக்கு அரசு சார்பில் வீட்டுமனை பட்டா வழங்கவும், பாதுகாப்பு வழங்கவும் தேசிய ஆணையத்தின் இயக்குனர் ரவிவர்மன் பரிந்துரை செய்துள்ளார்.
இதன்பிறகு இக்குழுவினர் நேற்று மாலை மதுரை வந்தனர். மதுரை அரசு மருத்துவமனையில் மாணவர் அய்யாசாமி சிகிச்சை பெற்று வரும் வார்டுக்கு சென்றனர். மருத்துவக்குழுவினர் உதவியோடு மாணவரை தனி அறைக்கு அழைத்துசென்று விசாரித்தனர். தாக்குதல் நடந்தது எப்படி? சாதியரீதியான கொடுமைகள் அரங்கேறியதா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் கேட்டு விசாரணை நடத்தினர். பின்னர் மாணவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் டாக்டர்களிடம் கேட்டறிந்தனர்.
The post மானாமதுரை அருகே தாக்குதலில் படுகாயம் தேசிய ஆதிதிராவிடர் ஆணைய குழு மாணவரிடம் விசாரணை appeared first on Dinakaran.