ராமநாதபுரம்,
குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வழங்கும் தேநீர் விருந்தையும், குடியரசு தின வரவேற்பு நிகழ்ச்சியையும் தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிப்பதாக அக்கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராமநாதபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது அவர் கூறியதாவது;-
"பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி தமிழ்நாட்டில் நடந்து வருகிறது. கடந்த மூன்றரை ஆண்டுகளாக இந்த ஆட்சிக்கு எவ்வளவு தொந்தரவு கொடுக்க முடியுமோ அவ்வளவு தொந்தரவுகளை மாநில கவர்னர் கொடுத்து வருகிறார்.
அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் கவர்னர் இயங்க வேண்டும். ஆனால் அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்-அமைச்சரைப் போல் தனியாக ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். இதை எப்படி வேடிக்கை பார்க்க முடியும?
எத்தனையோ முறை கண்டனங்களை பதிவு செய்துவிட்டோம். ஆனால் அவர் திருந்துவதாக இல்லை. அரசியலமைப்பு சட்டம் கவர்னருக்கு என்ன வரையறைகளை கொடுத்திருக்கிறதோ, அந்த வரையறைக்குள் நின்று அவர் பணியாற்ற வேண்டும்.
ஆனால் அதை மீறி துணை வேந்தர்கள் நியமனத்திற்கு தடையாக இருக்கிறார். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை திருப்பி அனுப்புகிறார். இந்த அதிகாரத்தை அவருக்கு யார் கொடுத்தது? சட்டப்பிரிவுகள் 200, 201-ல் கவர்னர், ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரங்கள் குறித்தும், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை இவர்கள் என்ன செய்ய வேண்டும் என்றும் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
இதையெல்லாம் பொருட்படுத்தாமல் தூக்கி எரிந்துவிட்டு, ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வின் கொள்கைகளை செயல்படுத்துவதற்கு ஒரு கவர்னர் இருக்கிறார் என்றால், அவர் கொடுக்கும் தேநீர் விருந்தில் மானம், ரோஷம் உள்ளவர்கள் யாராவது கலந்து கொள்வார்களா? தமிழ்நாட்டு நலனுக்கு எதிராக இருக்கும் கவர்னரை புறக்கணிக்கிறோம். கவர்னரின் தேநீர் விருந்தில் கலந்து கொள்ள மாட்டோம்."
இவ்வாறு செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.