மாநிலங்களவையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம்: 128 எம்.பிக்கள் ஆதரவு; 95 எம்.பிக்கள் எதிர்ப்பு

19 hours ago 3

புதுடெல்லி: மாநிலங்களவையில் 128 எம்.பிக்களின் ஆதரவுடன் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றபட்டது. மாநிலங்களவையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக 95 எம்.பிக்கள் வாக்களித்தனர். வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டு, 12 மணி நேர விவாதத்துக்குப்பின் நிறைவேறியது. இந்நிலையில் வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மாநிலங்களவையில் ஒன்றிய சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தாக்கல் செய்தார். அப்போது மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் கருப்பு நிற உடை அணிந்து வந்திருந்தனர்.

மசோதாவை தாக்கல் செய்து பேசிய கிரண் ரிஜிஜூ, “முன்மொழியப்பட்டுள்ள வக்ஃபு வாரிய திருத்த மசோதாவுக்கு மதத்துடன் எந்த தொடர்பும் இல்லை. சொத்துகளுடன் மட்டுமே தொடர்புடையது. வக்பு வாரிய திருத்த மசோதா முஸ்லிம்களின் உரிமையை பறிக்காது. அது முஸ்லிம்களுக்கு எதிரானதல்ல. அவர்களின் மத உணர்வை புண்படுத்துவது அல்ல. மாறாக பெண்களுக்கு அதிகாரமளிப்பது, அனைத்து முஸ்லிம் பிரிவுகளையும் வக்ஃபு வாரியத்தில் சேர்ப்பது, அவர்களின் உரிமைகளை பாதுகாப்பதை நோக்கமாக கொண்டது. மேலும் வக்ஃபு வாரியம் சொத்துகளை நிர்வகிக்க அல்ல, மேற்பார்வையிட மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2004ம் ஆண்டில் 4.9 லட்சம் வக்பு சொத்துகள் இருந்தன. தற்போது அது 8.72 லட்சமாக அதிகரித்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய அளவிலான சொத்துகளை வக்ஃபு வாரியம் வைத்துள்ளது. அரசாங்கம் ஒரு நல்ல நோக்கத்துடன் இந்த மசோதாவை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன் பெயரில் எந்த பிரச்னையும் இருக்க கூடாது. எனவே வக்ஃபு மசோதா ஒருங்கிணைந்த வக்ஃபு மேலாண்மை அதிகாரமளித்தல் செயல்திறன் மற்றும் மேம்பாடு மசோதா என பெயர் மாற்றப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து மசோதா மீது விவாதம் நடைபெற்றது. அப்போது மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினார்கள். பின்னர் வாக்கெடுப்பின் மூலம் மாநிலங்களவையில் 128 எம்.பிக்களின் ஆதரவுடன் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றபட்டது. மாநிலங்களவையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக 95 எம்.பிக்கள் வாக்களித்தனர். மாநிலங்களவையில் பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது. மாநிலங்களவையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு ஆதரவாக 128 எம்.பிக்களும், எதிராக 95 எம்.பிக்களும் வாக்களித்தனர். மக்களவையில் பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில் நிறைவேறிய வக்பு வாரிய மசோதா இன்று மாநிலங்களவையில் நிறைவேற்றபட்டது.

* மாநிலங்களவையில் வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக திமுக, அதிமுக வாக்கு
மாநிலங்களவையில் வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக திமுக, அதிமுக எம்.பி.க்கள் வாக்களித்தனர். தம்பிதுரை, சி.வி.சண்முகம் உள்பட அதிமுகவின் 4 எம்.பி.க்களும் மசோதாவிற்கு எதிராக வாக்களித்தனர். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். மசோதாவுக்கு ஆதரவாக ஜி.கே.வாசன் வாக்களித்தார்.

The post மாநிலங்களவையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம்: 128 எம்.பிக்கள் ஆதரவு; 95 எம்.பிக்கள் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article