
புதுடெல்லி,
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், 21-ந் தேதி தொடங்குகிறது. இந்த தொடர், ஒரு மாத காலம் நடைபெறுகிறது. நிலுவையில் உள்ள முக்கியமான மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கூட்டத்தொடருக்கு முன்பு, வழக்கம்போல், அனைத்துக்கட்சி தலைவர்களுடனும் ஆலோசனை நடத்த உள்ளது.
இந்த கூட்டத்தொடரில் இருந்து வருகைப்பதிவேட்டில் வருகையை பதிவு செய்வதற்கு பதிலாக, எம்.பி.க்கள் அவரவர் இருக்கையில் பொருத்தப்பட்டுள்ள கையடக்க கணினியில் மின்னணு முறையில் வருகையை பதிவு செய்யும் முறை அமலுக்கு வருகிறது.
இந்நிலையில், மாநிலங்களவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜெகதீப் தன்கரை மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே சந்தித்தார். இத்தகவலை மல்லிகார்ஜுன கார்கே தனது 'எக்ஸ்' வலைத்தள பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது "மாநிலங்களவை தலைவரை சந்தித்தேன். அவருடனான உரையாடல் பயனுள்ளதாக இருந்தது. வரும் 21-ந் தேதியில் இருந்து தொடங்கும் மாநிலங்களவை கூட்டத்தொடர், ஆக்கப்பூர்வமானதாக இருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் விரும்புகிறோம். அப்படி இருப்பதற்காக, பொதுமுக்கியத்துவம் வாய்ந்த அரசியல், வெளியுறவு கொள்கை, சமூக-பொருளாதார பிரச்சினைகள் விவாதிக்கப்பட வேண்டும்."
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.