திருப்பரங்குன்றம் கோவிலில் மண்டல பூஜை தொடங்கியது - குவியும் பக்தர்கள்

9 hours ago 1


முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்தனர்.

காலை 8 மணி முதல் கோவிலுக்குள் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். நேற்று முன்தினம் நடை சாற்றப்படவில்லை. இதனால் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை இடைவிடாது 14 மணி நேரம் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கும்பாபிஷேகம் முடிவடைந்ததையொட்டி நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து நீண்ட நேரம் காத்திருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்து சென்றனர். கும்பாபிஷேகம் திருப்பணிக்காக கருவறைக்குள் பக்தர்கள் 95 நாட்கள் அனுமதிக்கப்படாத நிலையில் தற்போது அளவுக்கு அதிகமாக பக்தர்கள் கூட்டம் வந்த வண்ணம் உள்ளது.

கடந்த 2 நாட்களாக கட்டணம் செலுத்த கூடிய சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டதால் பக்தர்கள் அனைவரும் ஒரே வரிசையாக சென்றுதரிசனம் செய்தனர்.

கருவறையில் திருப்பணிக்காக கடந்த ஏப்ரல் 9-ந் தேதி பாலாலயம் நடந்தது. அன்று முதல் கடந்த 12-ந் தேதி வரை சண்முகர் சன்னதி தற்காலிக கருவறையாக உருவாக்கப்பட்டு அத்திமரத்தாலான சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

அதே சமயம் உற்சவர் சன்னதிக்கு வள்ளி, தெய்வானை சமேத சண்முகப் பெருமான் இடம் மாற்றம் செய்யப்பட்டனர். இதனால் ஒரே இடத்தில் வள்ளி, தெய்வானை சமேத சண்முகரும், சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுமாக காட்சி தந்தனர்.

நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் முடிந்ததும் சண்முகர் சன்னதிக்கு சண்முகரும், உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமியும் 95 நாட்களுக்கு பிறகு தங்களுக்கு உரிய சன்னதிகளில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலையில் கோவிலின் மகா மண்டபத்தில் முருகப்பெருமான், கோவர்த்தனாம்பிகை, சத்யகிரீஸ்வரர் ஆகிய தெய்வங்களுக்கு 3 குடங்களில் புனித நீர் நிரப்பப்பட்டு சிறப்பு பூஜையுடன் கூடியமண்டல பூஜை தொடங்கியது.

இந்த பூஜை 48 நாட்களுக்கு தினமும் மாலையில் நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் ப.சத்யபிரியாபாலாஜி, அறங்காவலர்கள் வ.சண்முகசுந்தரம், நா.மணி செல்வன், கோவில் துணை கமிஷனர் சூரியநாராயணன், சிவாச்சாரியார்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Read Entire Article