அமராவதி: ஆந்திராவில் நடைபெற உள்ள மாநிலங்களவை எம்பி இடைத்தேர்தலில் போட்டியிட அண்ணாமலைக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. பாஜ வேட்பாளராக வெங்கட சத்தியநாராயணா அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஆந்திராவில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை எம்பி பதவிக்கான இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாஜ போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இதன் வேட்பாளராக தமிழ்நாடு மாநில பாஜவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை அறிவிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகின. தமிழ்நாட்டில் பாஜ கட்சி, அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்காக மாநில கட்சி தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை சமீபத்தில் விலகினார்.
இதற்காக அவருக்கு தேசிய அளவில் கட்சியில் முக்கிய பொறுப்பு தரப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடக்கவில்லை. எனவே, ஆந்திராவிலிருந்து மாநிலங்களவை எம்பியாக அண்ணாமலை தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அதுவும் கைகூடவில்லை. ஆந்திராவில் மாநிலங்களவை இடைத்தேர்தல் வேட்பாளராக வெங்கட சத்தியநாராயணாவை பாஜ நேற்று அறிவித்தது. மேற்கு கோதாவரி மாவட்டம் பீமாவரத்தை சேர்ந்த மூத்த பாஜ தலைவரான சத்தியநாராயணா (64) ஆர்எஸ்எஸ் அமைப்புடன் நீண்ட கால தொடர்புடையவர். இவரது தேர்வால், அண்ணாமலையின் எம்பி கனவும் பொய்த்துப் போயுள்ளது.
The post மாநிலங்களவை இடைத்தேர்தல் ஆந்திராவில் பாஜ வேட்பாளர் அறிவிப்பு: அண்ணாமலைக்கு வாய்ப்பு மறுப்பு appeared first on Dinakaran.