மாநில தலைவர் பதவி பறிபோன மறுநாளே இமயமலைக்கு பறந்தார் அண்ணாமலை: மன அமைதிக்காக புனித தலங்களில் வழிபாடு

1 month ago 9

சென்னை: மாநில தலைவர் பதவி பறிபோன மறுநாளே இமயமலைக்கு அண்ணாமலை பறந்தார். அவர் அங்கு 3 நாட்கள் ஆன்மிக பயணத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக பாஜ தலைவராக கடந்த 2021ம் ஆண்டு அண்ணாமலை பொறுப்பேற்றார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தல் வரை தலைவராக இருக்கிறேன் என்று டெல்லி தலைவரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனால், அண்ணாமலை தலைவராக இருந்தால் தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க முடியாது என்று டெல்லி மேலிடம் நினைத்தது.

அதே நேரத்தில் கூட்டணி வைக்க வேண்டும் என்றால் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்பதில் எடப்பாடி உறுதியாக இருந்தார். இதனால், அண்ணாமலையின் பதவி பறிக்கப்பட்டு பாஜ தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். அவர் கடந்த சனிக்கிழமை பாஜ தலைவராக பொறுப்ேபற்று கொண்டார். அதே நேரத்தில் அண்ணாமலைக்கு பாஜ தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவி மட்டும் வழங்கப்பட்டது. தலைவர் பதவியில் இருந்து மாற்றப்பட்டதால் அண்ணாமலை கடும் அதிருப்தியிலும், வேதனையிலும் இருந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லி தலைவர்களை தான் சந்திக்க போகிறார் என்று முதலில் தகவல் வெளியானது. ஆனால், அவர் டெல்லியில் தலைவர்களை சந்திக்கவில்லை. டெல்லியில் இறங்கிய அவர் அங்கிருந்து உத்தரகண்ட் சென்றார். உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி உள்ளிட்ட புனித தலங்களில் அண்ணாமலை வழிபாடு செய்வதற்காக தான் சென்றுள்ளார்.

தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதால் மன அழுத்தத்தில் இருந்ததால் தான், மன அமைதிக்காக அவர் புனித தலங்களில் வழிபாடு செய்து வருகிறார். பின்னர் அவர் இமயமலை சென்று, தியானத்தில் ஈடுபடுகிறார். 3 நாட்கள் ஆன்மிக பயணத்தை தொடர அவர் முடிவு செய்துள்ளார். பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பும் அவர் பாஜ தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் அண்ணாமலை தொடர்பான படங்களை பாஜ தேசிய பொதுக்குழு உறுப்பினர் வினோஜ் பி.செல்வம் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் அண்ணாமலை, ரஜினிகாந்த் ஸ்டைலில் பாபா முத்திரையில் போஸ் கொடுப்பது போல அது உள்ளது.

The post மாநில தலைவர் பதவி பறிபோன மறுநாளே இமயமலைக்கு பறந்தார் அண்ணாமலை: மன அமைதிக்காக புனித தலங்களில் வழிபாடு appeared first on Dinakaran.

Read Entire Article