மாநில சுயாட்சி

2 days ago 3


மா நிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி’ – இதுதான் அறிஞர் அண்ணா காலத்தில் இருந்து, திமுகவின் குரலாக ஒலித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் மாநிலத்தின் அதிகாரங்களை எல்லாம் ஒன்றிய அரசு பறித்துக் கொள்வது மட்டுமல்ல… ஒரு மாநிலத்தின் சூழல் அறிந்து முடிவெடுக்காமல், தன்னிச்சையாக முடிவெடுத்து அறிவிப்பது தான். தேசிய கல்விக்கொள்கையை ஏற்காவிட்டால், கல்வி நிதி வழங்க மாட்டோம் என்ற ஒன்றிய பாஜ கல்வி அமைச்சரின் அறிவிப்பும் இந்த பட்டியலில் தான் ேசரும். தேசிய கல்விக்கொள்கை, நீட் தேர்வு, அவசியமற்ற சட்ட திருத்த மசோதாக்கள் என மாநில மக்கள், மாணவர்களின் நலனை யோசிக்காமல் செயல்படுவதை வழக்கமாகவே கொண்டுள்ளது ஒன்றிய பாஜ அரசு.

கடந்த 1974, ஏப்ரல் 16ம் தேதி நீதிபதி ராஜமன்னார் தலைமையிலான மூவர் குழு அளித்த பரிந்துரைகளை அடிப்படையாக கொண்டு சட்டப்பேரவையில் மாநில சுயாட்சி தீர்மானத்தை அப்போதைய முதல்வர் கலைஞர் நிறைவேற்றினார். 51 ஆண்டுகள் கடந்து மீண்டும் மாநில சுயாட்சியை வலியுறுத்தும் தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார். ஏற்கனவே, ஒன்றிய அரசின் அதிகாரத்தில் ரயில்வே, பாதுகாப்புத்துறை, வெளியுறவுத்துறை, வங்கி நிர்வாகம், ரயில்வே, அஞ்சலகம் போன்ற முக்கிய துறைகள் உள்ளன. ஆண்டுதோறும் ஒன்றிய அரசுக்கான அதிகார பட்டியல் அதிகரித்தபடியே செல்கிறது. அதேசமயம், மாநில அரசின் அதிகாரங்கள் படிப்படியாக குறைந்து வருகின்றன. அறிஞர் அண்ணா, ‘‘ஒன்றிய அரசு மாநிலங்களின் இணைப்புச்சங்கிலியாகத்தான் செயல்பட வேண்டும்.

ஆனால் துருப்பிடித்த இணைப்புச்சங்கிலிகளை வலுப்படுத்துவதற்காக நம் விரல்களை வெட்டிக் கொண்டு போவதைப் போல, மாநிலங்களின் உரிமைகளை ஒன்றிய அரசு பறித்துக் கொள்ளக்கூடாது’’ என்றார். ஒரு மாநிலத்துக்கான திட்டங்கள், அந்த மாநில அரசுகளால்தான் வகுக்கப்பட வேண்டும். அதை விட்டு, ஒன்றிய அரசு அதற்கான திட்டங்களை தீட்டக்கூடாது. அதிகாரங்களை அபகரிக்கும் போக்கில் ஈடுபடக்கூடாது. வரிப்பகிர்விலும் பாரபட்சம் காட்டக்கூடாது. ஜிஎஸ்டி உள்ளிட்ட வரி வருவாயை ஒன்றிய அரசுக்கு அதிகளவு ஈட்டித்தருகிறது தமிழக அரசு. ஆனால், வரிப்பகிர்வில் வட மாநிலங்களுக்குத்தான் ஒன்றிய அரசு நிதியை அள்ளித் தருகிறது. தமிழகம் இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட நிலையில், கேட்கும் வெள்ள நிவாரண நிதியில் கூட, வீண் அரசியல்தான் செய்கிறது ஒன்றிய பாஜ அரசு.

ஒன்றியத்தில் பாஜ ஆட்சி அமைத்த பின்பு, மாநில உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு வருகிறது. மாநில பட்டியலில் உள்ள கல்வி, மருத்துவம், சட்டம், நிதி ஆகியவற்றை கூட, ஒன்றிய அரசே தீர்மானிக்கும் சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, மாநில அரசின் நுழைவுத்தேர்வு மூலம் மருத்துவ படிப்புகள் நிரப்பப்பட்டு வந்தன. தற்போது, நீட் தேர்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. நீட் தேர்வு தமிழகத்தில் மட்டும் 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரை உயர்ப்பலி வாங்கியுள்ளது. இருமொழிக் கொள்கையில் சிறந்து விளங்கும் மாநிலமான தமிழகத்தில், மும்மொழிக் கொள்கையை பலவந்தமாக திணிக்கும் நடவடிக்கையிலும் ஒன்றிய அரசு ஈடுபட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் முழுமையாக தவிர்க்கப்பட வேண்டும். மாநில நலன்சார்ந்த திட்டங்களை தீட்டுவதில் இனியாவது ஒன்றிய அரசு கவனம் செலுத்த வேண்டும். இதை மனதில் கொண்டு மாநில சுயாட்சி மற்றும் உரிமைகளை மீட்க குழு அமைக்கப்பட்டுள்ளதை தமிழக மக்கள் வெகுவாக வரவேற்றுள்ளனர்.

The post மாநில சுயாட்சி appeared first on Dinakaran.

Read Entire Article