*கவுன்சிலர்கள் வாக்குவாதம்; 17 பேர் வெளிநடப்பு
கோவை : கோவை மாநகராட்சி கவுன்சில் கூட்டம், மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் நேற்று நடந்தது. மேயர் ரங்கநாயகி தலைமை தாங்கினார். கமிஷனர் சிவகுரு பிரபாகரன், துணை மேயர் வெற்றிசெல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், மாநகரில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து மொத்தம் 89 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
கூட்டம் துவங்கியதும், திமுக தவிர, காங்கிரஸ், மதிமுக, அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூ., இந்திய கம்யூ., உள்ளிட்ட அனைத்து கட்சி கவுன்சிலர்களும் ஒன்றுசேர்ந்து, மேயர் இருக்கையை முற்றுகையிட்டனர். மேயர் இருக்கைக்கு முன்பாக தரையில் அமர்ந்துகொண்டு, மாநகரில் சொத்து வரி விதிப்புக்காக மேற்கொள்ளப்படும் டிரோன் சர்வே திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும். சொத்து வரி விதிப்பை வாபஸ்பெற வேண்டும் என ஒட்டுமொத்தமாக கோஷம் எழுப்பியதோடு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால், கூட்டத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. இதற்கு மேயர் மற்றும் கமிஷனர் உரிய பதில் அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். சுமார் 10 நிமிடம் கோஷத்திற்கு பிறகு 17 கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர், மாநகராட்சி நுழைவுவாயில் அருகே உள்ள காந்தி சிலை முன் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். இதுபற்றி மாமன்ற எதிர்கட்சி தலைவர் அழகு ஜெயபாலன் கூறியதாவது:
நாங்கள் திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம். ஆனால் மக்கள் பிரச்னைக்கு தீர்வுகாண முன்களத்தில் நிற்போம். கூட்டணியில் இருக்கிறோம் என்பதால், மக்கள் பிரச்னையை பற்றி கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது. அவர்களுக்காக குரல் கொடுக்காமல் இருக்க முடியாது. மாநகராட்சியில் கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு 100 சதவீதம் சொத்து வரி அமல்படுத்தியுள்ளனர். இதனால், மக்கள் கடுமையாக அவதியுறுகின்றனர்.
இதை 50 சதவீதமாக குறைக்க வேண்டும். ஆண்டுதோறும் 6 சதவீதம் சொத்து வரி விதிப்பு அமல்படுத்துகிறார்கள். இதை, அடியோடு ரத்துசெய்ய வேண்டும். குறித்த காலத்தில் சொத்து வரி செலுத்த தவறினால் ஒரு சதவீதம் அபராதம் விதிக்கப்படுகிறது. இதையும் ரத்து செய்ய வேண்டும். மிக முக்கியமாக, சமீப காலத்தில் மாநகரில் டிரோன் சர்வே நடத்தப்பட்டு, அளவுக்கு அதிகமாக சொத்து வரி விதிக்கப்படுகிறது.
இது, மக்களை, பெரும் பீதிக்கு உள்ளாக்குகிறது. நாம் செய்யும் பல சாதனைகள், இந்த விஷயத்தில் அடிபட்டு போய்விடுகிறது. ஏற்கனவே ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பால் மக்கள் படாதபாடு படுகிறார்கள். இடையில், டிரோன் சர்வே இன்னும் கூடுதல் சுமையை தருகிறது. எனவே, இந்த டிரோன் சர்வே முறையை உடனடியாக கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.மாமன்ற கூட்டத்தில், கோவை தொகுதி எம்.பி. கணபதி ராஜ்குமார், நேற்று முதல்முறையாக பங்கேற்றார். அவர் பேசியதாவது: கோவை விமான நிலைய விரிவாக்கம், மெட்ரோ ரயில் திட்டம், செம்மொழி பூங்கா, பெரியார் நினைவு நூலகம் என பல்வேறு அருமையான திட்டங்களை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவைக்கு கொண்டுவந்துள்ளார். நாம் எல்லோரும் அவருக்கு துணையாக இருக்க வேண்டும். ஆனால், இங்குள்ள மாநகராட்சி அதிகாரிகள் பலர், அரசுக்கு எதிராக செயல்படுகிறார்கள்.
குறிப்பாக, சொத்து வரி விதிப்பில் பில் கலெக்டர்கள் அத்துமீறலில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். மக்களை பீதி அடைய செய்யும் டிரோன் சர்வே திட்டத்தை கைவிட வேண்டும்.
தெருநாய்களுக்கு கருத்தடை செய்கிறோம் என்ற பெயரில் சில அதிகாரிகள், தவறான வழிமுறையை கையாண்டு, பணம் சம்பாதிப்பதில் மட்டும் குறியாக இருக்கிறார்கள். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும். மாநகரில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள், விதிமீறல் ஆவின் கடைகள் அதிகரித்து விட்டன. அங்கு, சுகாதாரமற்ற உணவுகள் விற்கப்படுகிறது. இந்த கடைகளை, அடியோடு அகற்றவேண்டும்.
மாநகர வீதிகளில் குப்பை அகற்றுவதில் தீவிர கவனம் செலுத்தவேண்டும். சூயஸ் குடிநீர் திட்டப்பணிகளை முறைப்படுத்த வேண்டும். இப்படி எண்ணற்ற குறைபாடுகள் இருகின்றன. இவற்றை கமிஷனர் கண்காணித்து, உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஒரு எம்.பி., தனது தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதியிலும் தலையிட்டு, அங்குள்ள குறைகளை கண்டுபிடித்து, தீர்வுகாண, அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதன்அடிப்படையில், சில குறைபாடுகளை சுட்டிக்காட்டியுள்ளேன். அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படாத வகையில், கமிஷனர் உள்ளிட்ட உயர்அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். மேயர் ரங்கநாயகி பேசுகையில்,“சொத்து வரி விதிப்பில் 20 சதவீதம் மட்டுமே முறையாக கணக்கெடுப்பு நடக்கிறது. 80 சதவீதம் கணக்கெடுக்கப்படுவது இல்லை என்ற புகார் வந்த காரணத்தால், டிரோன் சர்வே நடத்தப்படுகிறது. இதில் உள்ள குறைபாடுகள் சரிசெய்யப்படும்’’ என்றார்.
The post மாநகரில் சொத்து வரி விதிப்புக்கு டிரோன் சர்வே நடத்த கடும் எதிர்ப்பு appeared first on Dinakaran.