மாநகராட்சியின் முக்கிய பகுதிகளில் ஹைமாஸ் லைட் அமைக்க திட்டம்: காரைக்குடி மேயர் ஆய்வு

1 day ago 3

காரைக்குடி, மே 15: காரைக்குடி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட மீனாட்சிபுரம் மற்றும் கழனிவால்-திருச்சி சாலை ஓ.சிறுவயல் வளைவு பகுதிகளில் ரூ.13 லட்சத்தில் ஹைமாஸ் லைட் அமைக்க மேயர் எஸ்.முத்துத்துரை தலைமையில் அதிகாரிகள் இடம் தேர்வு செய்தனர். பின்னர் மேயர் எஸ்.முத்துத்துரை கூறுகையில், முதல்வர் மு.க.ஸ்டாலினின் நான்கு ஆண்டுகால நல்லாட்சியில் நமது மாநகராட்சிக்கு எண்ணற்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாநகராட்சியுடன் இணைந்த ஊராட்சி பகுதிகளுக்கும் வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் உறுதுணையுடன் மாநகராட்சி பகுதியின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து திட்டங்களும் கொண்டுவரப்படுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் ஒவ்வொரு பகுதியின் தேவைகள் அறிந்து அதற்கு ஏற்றார் போல் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. அதன்படி வளர்ந்து வரும் நமது மாநகராட்சி பகுதிக்கு தேவையான பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மக்களின் தேவைகளுக்கு ஏற்ப செயல்படுத்தப்படுகிறது.

மாநகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளுக்கும் அடிப்படை தேவைகளுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து தற்போது மீனாட்சிபுரம் மற்றும் மக்கள் அதிகம் பயன்படுத்தும் மிகமுக்கிய சாலையான கழனிவாசல் திருச்சி சாலையில் பகுதிகளில் ஹைமாஸ் லைட் அமைக்கப்பட உள்ளது. தவிர நகரின் முக்கிய பகுதிகளில் தேவைக்கு ஏற்ப ஆய்வு செய்து ஹைமாஸ் லைட் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கு நேரடியாக சென்று அப்பகுதி மக்களின் தேவைகள் குறித்து கேட்டு அதனை பூர்த்தி செய்து வருகிறோம். மக்களின் தேவைகள் குறித்து என்னிடம் நேரில் வந்து தெரிவிக்கலாம். மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக தங்குதடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய அரசு நிதி ஒதுக்கி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, என்றார்.

உதவி பொறியாளர் கணேசன், மாமன்ற உறுப்பினர் கண்ணன், வட்ட செயலாளர் பாண்டி உள்பட பலர் உடன் இருந்தனர்.

The post மாநகராட்சியின் முக்கிய பகுதிகளில் ஹைமாஸ் லைட் அமைக்க திட்டம்: காரைக்குடி மேயர் ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article