சென்னை: மாநகராட்சி மண்டல குழு கூட்டத்தில், மறைந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு இரங்கல் தீர்மானம், காங்கிரஸ் கவுன்சிலர் சிவ ராஜசேகரன் முன்மொழிய, நிறைவேற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டல குழு கூட்டம், மண்டல தலைவர் ஸ்ரீராமுலு தலைமையில் நடைபெற்றது.
கூட்டம் தொடங்கியதும், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவுக்கு, காங்கிரஸ் கவுன்சிலர் சிவ ராஜசேகரன் இரங்கல் தெரிவிக்குமாறு தீர்மானத்தை கொண்டு வந்து பேசினார். இந்த தீர்மானத்தை கவுன்சிலர் சிவ ராஜசேகரன் முன்மொழிய, திமுக கவுன்சிலர் ஆசாத், முஸ்லீம் லீக் கவுன்சிலர் பாத்திமா முசாபர் ஆகியோர் வழி மொழிந்தனர்.
அப்போது, கவுன்சிலர் சிவ ராஜசேகரன் பேசுகையில், ‘‘பெரியாரின் மரபு வழி பேரனுக்கு திமுகவின் கொள்கை வழி பேரன் முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தியதை நன்றியுடன் நினைக்கிறோம். தமிழக அரசியலில் தன்னுடைய பேச்சால் செயல் திறனால் தமிழ்நாடு அரசியலின் வரலாற்று பக்கங்களில் தவிர்க்க முடியாத முதன்மை தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தார். அவரது இழப்பு தமிழக காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமின்றி தமிழ்நாட்டுக்கே பேரிழப்பு’’ என்றார். இதை தொடர்ந்து அனைத்து கவுன்சிலர்களும் எழுந்து நின்று மறைந்த ஈவிகேஎஸ்.இளங்கோவனுக்கு அஞ்சலி செலுத்தினர்.
The post மாநகராட்சி மண்டல குழு கூட்டத்தில் ஈவிகேஎஸ்.இளங்கோவனுக்கு இரங்கல் தீர்மானம்: காங்கிரஸ் கவுன்சிலர் சிவ ராஜசேகரன் முன்மொழிந்தார் appeared first on Dinakaran.