*பொதுமக்கள் வரவேற்பு
திருப்பூர் : திருப்பூர் மாநகரில் பல்வேறு இடங்களில் மாநகர போலீஸ் சார்பில் வைக்கப்பட்டுள்ள வழிகாட்டி பலகையால் பயமின்றி பயணிக்கலாம் என வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.
பனியன் தொழில் நிறைந்த நகரமாக திருப்பூர் உள்ளது.
டாலர் சிட்டி, குட்டி ஜப்பான் என பல்வேறு பெயரிட்டு அழைக்கப்பட்ட திருப்பூருக்கு தினசரி வெளி மாவட்டம், வெளி மாநிலங்களிலிருந்து பணி நிமித்தமாக கார், இரு சக்கர வாகனங்களில் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
திருப்பூர் சிறிய மாநகராக இருந்தாலும் அந்நிய செலவாணியை அள்ளித்தரும் மாநகரமாக உள்ளது. இந்த மாநகரில் பல வெளியூர் வாசிகள் தங்கியிருந்து தங்கள் பணிகளை முடித்துவிட்டு தான் செல்வார்கள். அதுமட்டுமல்லாமல், கோவை, ஈரோடு, சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கடைகள் அமைத்து டீ-சர்ட் உள்ளிட்ட ஆடைகளை பலர் விற்பனை செய்து வருகின்றனர்.
அந்த ஆடைகள் அனைத்தும் தைத்து காதர்பேட்டையில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. அந்த ஆடைகளை வாங்கி சென்று விற்பனை செய்யும் வியாபாரிகளும் வருகின்றனர். இந்நிலையில், திருப்பூருக்குள் நுழையும்போது இது எந்த ஊருக்கு செல்லும் ரோடு என்பதில் பலருக்கும் குழப்பம் வருவது இயல்பு.
முக்கிய 8 சாலைகளின் வழியாக பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் செல்வதால் எந்த ரோட்டில் சென்றால் எங்கு செல்லலாம் என்ற யோசனையை தவிர்க்க பெரும்பாலும் மேப்களை பயன்படுத்துகின்றனர். அதுவும் சில சமயங்களில் வழியில்லாத பாதைக்கு கொண்டு சேர்த்துவிடும்.
அதனால் மாநகர போலீஸ் சார்பில் திருப்பூர் புஸ்பா தியேட்டர், ரயில்வே மேம்பாலம், கீரணி ஜங்கன், மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக ஜங்சன் ஆகிய இடங்களில் வழிகாட்டி பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதியடைந்துள்ளனர்.
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது: நாங்கள் சேலத்திலிருந்து பனியன் ஆடைகள் வாங்க அடிக்கடி திருப்பூர் வருகிறோம். திருப்பூருக்குள் நுழைந்தால் எல்லா ரோடுகளும் ஒரே மாதிரி தான் இருக்கும். இந்த வழி எங்கு செல்கிறது என்ற குழப்பம் எல்லா ஓட்டுனர்களுக்கும் இருக்கும். தற்போது காதர்பேட்டையில் இருந்து புறப்பட்டால் போலீசாரால் வைக்கப்பட்டுள்ள வழிகாட்டி பலகை சரியாக போய் சேர வேண்டிய இடத்திற்கு அழைத்து செல்கின்றது.
மேப்களை நம்பி பயணித்து வழியில்லாத இடத்திற்கு செல்வதற்கு பதிலாக போலீஸ் சார்பில் வைக்கப்பட்டுள்ள வழிகாட்டி பலகையை பார்த்து அச்சமில்லாமல் பயணிக்கலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர். போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன் கூறியதாவது: மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவுப்படி தற்போதைக்கு 4 இடங்களில் வழிகாட்டி பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டி பலகை வெளியூரிலிருந்து திருப்பூருக்கு வரும் வாகன ஓட்டிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும்.
இன்னும் பல்வேறு இடங்களில் இது மாதிரியான வழிகாட்டி பலகைகளை வைக்க திட்டமிட்டுள்ளோம். திருப்பூருக்கு வரும் மக்கள் எந்த இடையூறும் இல்லாமல் சேர வேண்டிய இடத்திற்கு சரியான முறையில் சென்று சேர மாநகர போலீஸ் இந்த வழிகாட்டி பலகைகள் மூலம் உதவி செய்யும். இவ்வாறு கூறினார்.
The post மாநகர போலீஸ் சார்பில் வாகன ஓட்டிகளுக்கு பயனளிக்கும் வழிகாட்டி பலகை appeared first on Dinakaran.