பூந்தமல்லி: பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து நாள்தோறும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு 150க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் அரசுப்பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் காலியாக இருக்கும் பேருந்துகளில் மாணவிகளுடன் சேர்ந்து அமர்ந்து சில்மிஷத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து மாநகர போக்குவரத்து கழக நிர்வாகமும், போலீசாரும் அவ்வப்போது அவர்களை விரட்டியடித்து எச்சரிக்கை செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் பேருந்து நிலையத்தில் காலியாக இருந்த மாநகர பேருந்தில் அரசுப்பள்ளி மாணவர்கள் சிலர் பள்ளி மாணவிகளுடன் அமர்ந்து சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனைப் பார்த்த பேருந்து டிரைவர் செல்வம் அவர்களை திட்டி விரட்டியடித்து எச்சரித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பள்ளி மாணவர்கள் டிரைவரை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றனர். இதனைப் பார்த்த அங்கிருந்த மற்ற கண்டக்டர் மற்றும் டிரைவர்கள் அந்த மாணவர்களை மடக்கி பிடித்தனர். இதில் டிரைவரை தாக்கிய மாணவன் தப்பி ஓடிய நிலையில் அவரது நண்பர்களை பிடித்த டிரைவர்கள் பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் டிரைவரை தாக்கிய மாணவனின் நண்பர்களை பிடித்துச்சென்று விசாரித்து வருகின்றனர். இதனை அங்கிருந்த பயணிகள் சிலர் செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது. மாநகர பேருந்து டிரைவரை பள்ளி மாணவன் தாக்கிய தகவல் பரவியதையடுத்து ஆங்காங்கே டிரைவர்கள் பேருந்துகளை நிறுத்திவிட்டு ஒன்று திரண்டனர்.
இதனால் பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டதுடன், கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. பள்ளி மாணவர்கள் பேருந்து நிலையத்தில் தினந்தோறும் அட்டகாசம் செய்து வருவதாகவும், இதனை போலீசார் ரோந்து பணியில் இருந்து கண்காணிக்க வேண்டும் எனவும் மாநகர பேருந்து டிரைவர்கள், கண்டக்டர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post மாநகர பேருந்தில் மாணவிகளுடன் சில்மிஷம்; தட்டி கேட்ட டிரைவரை தாக்கிய மாணவன்: பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.