மாதவிடாய் கால தலைவலி… தீர்வு என்ன?

3 weeks ago 3

மாதவிடாய் காலத்தில் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு விதமாக உடல் மற்றும் மன மாற்றங்கள் ஏற்படும். எனவேதான் ஒருவர் எடுத்துக்கொள்ளும் மருந்துகள், அல்லது வீட்டு வைத்தியங்கள் மற்றவருக்கு ஏற்புடையாது என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். மாதவிடாய் காலத்திற்கு முன்-பின் மற்றும் மாதவிடாய் நாட்களில் என வயிற்றுவலி, மார்பக வலி, சிலருக்கு இடுப்பு, முதுகு பகுதி களில் வலி, மூட்டுகள் குடைதல், இதனுடன் மாதவிடாய் தலைவலி தற்போது மூன்றில் ஒரு பெண் அனுபவிப்பதாக மருத்துவ ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

பொதுவான காரணங்கள்

ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் அளவின் மாற்றங்கள் காரணமாக பெண்கள் தலைவலிக்கு ஆளாகிறார்கள். அதாவது அண்டவிடுப்பின் (ovulation) பின்னர், கருப்பையிலிருந்து முட்டை வெளியேறும்போது, ஹார்மோன் அளவு குறையத் தொடங்குகிறது. ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் பீரியட்ஸ் தொடங்குவதற்கு முன் மிகக் குறைந்த மட்டத்தில் இருக்கும். இதனால் ஹார்மோன்களின் அளவு மேலும் குறைந்து பீரியட்ஸின்போது தலைவலிக்கு வழிவகுக்கிறது.

குளுக்கோஸ் அளவில் மாற்றம்

மாதவிடாய், ப்ரீ -மெனோபாஸ் , மெனோபாஸ் காலங்களில் தலைவலி வருவதற்கு சாத்தியமான காரணங்களில் ஒன்று உடலில் குளுக்கோஸ் அளவு குறைவது. ஈஸ்ட்ரோஜனின் குறைந்த அளவு குளுக்கோஸின் இருப்பையும் குறைக்கிறது, இதனால் சோர்வு மற்றும் தலைச்சுற்றல் ஏற்படுகிறது. ஈஸ்ட்ரோஜன் உடலில் குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது, மேலும் இந்த ஹார்மோனின் அளவு குறையும்போது, ​​குளுக்கோஸ் கிடைக்கும் தன்மையும் குறையலாம்.

இதயத்துடிப்பில் மாற்றங்கள்

ஹார்மோன் மாற்றங்களால் இதயம் ஒழுங்கற்ற முறையில் துடிக்கலாம் .இதுவும் தலைச்சுற்றலைத் தூண்டுகிறது. சிலருக்கு தலைவலியையும் உண்டாக்கும். சிலருக்கு மாரடைப்பு போன்ற நிலையை உணர்வதும் இதன் காரணமே.

மனநிலை மாற்றம்

மனதில் மாதவிடாய் கால மனநிலை மாற்றம் எனப்படும் PMS (Premenstrual syndrome) காரணமாகவும் சிலருக்கு தலைவலி உண்டாகலாம். அதிகம் மூளை எதிர்மறையாக சிந்திக்கும் தருவாயில் மூளை ஒருவித ஓய்வற்ற நிலைக்குச் செல்லும் போது தலைவலியாக வெளிப்படுத்தும்.

முப்பதுகளின் மத்தியில் இந்த மாத விடாய் கால தலைவலி அதிகமாக இருப்பின் ப்ரீ-மெனோபாஸ் வருவதற்கான அறிகுறிகளாகவும் எடுத்துக்கொண்டு அதற்கான மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் பெறலாம். எதுவானாலும் மகளிர் மற்றும் மகப்பேறு நிபுணர்கள் ஆலோசனைகள் மிக அவசியம். மேலும் மருத்துவத் துறையில் ஹார்மோன் மாற்று அறுவை சிகிச்சை துவங்கி இதற்கு ஏராளமான தீர்வுகள் உள்ளன. இந்தத் தலைவலிக்கு என்னென்ன வீட்டு வைத்தியங்கள் செய்யலாம். இதோ சில கைவைத்தியங்கள். ‘மைக்ரெய்ன்’ (Migraine) எனப்படும் ஒற்றைத்தலைவலி நரம்பு தொடர்பான ஒரு வகை நோய் ஆகும். பொதுவாக, பருவமடையும் வயதில் தொடங்கும் இந்த மைக்ரெய்ன் தலைவலி பிரச்னை, 35 வயதிலிருந்து 45 வயதுக்குள் இருப்பவர்களைத்தான் அதிகம் பாதிக்கும். உணவு முறைகள், குடும்பப் பின்னணி, மரபணு என இவைகளும் கூட இதற்குக் காரணமாக அமையும்.

*நொச்சித்தழையை வெந்நீரில் போட்டு ஆவி பிடித்தாலே, பெரும்பாலும் இந்த ஒற்றைத் தலைவலிக்கு தீர்வு காணலாம்.
*எலுமிச்சைத் தோலை நன்கு காய வைத்து அரைத்து நெற்றியில் பற்று போடுவது, ஒற்றைத் தலைவலிக்கு நல்ல பலனை தரும்.
*கோஸ் இலைகளை நன்கு நசுக்கி ஒரு சுத்தமான துணியில் கட்டி தலையின் மீது ஒத்தடம் தரலாம். கோஸ் உலர்ந்து விட்டால் புதிதாக இலைகளை நசுக்கி துணியில் கட்டவும்.
*ஒற்றைத் தலைவலிக்கு தும்பைப் பூவை சாறு பிழிந்து, ஒரு மெல்லிய துணியில் நனைத்து நெற்றியில் பற்றுப் போட நிவாரணம் கிடைக்கும்.
*பால், இஞ்சிச் சாறு மற்றும் நல்லெண்ணெய் ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்துக்கொண்டு மூன்றையும் கலந்து சூடுசெய்து தலைக்குத் தடவி ஒரு ஐந்து நிமிடம் நன்கு மசாஜ் செய்த பின்பு சிகைக்காய் போட்டு தலைக்கு குளித்தால் ஒற்றைத் தலைவலி நீங்கும்.
*அரை ஸ்பூன் கடுகுப் பொடியை முன்று ஸ்பூன் தண்ணீரில் கலந்து இந்த கரைசலை மூக்கில் விட ஒற்றைத் தலைவலி தீரும்.
*ஆறுமுக செந்தூரம், கவுரி சிந்தாமணி செந்தூரம் ஆகிய மருந்துகளை, சுக்கு, மிளகு, திப்பிலி சேரக்கூடிய திரிகடுகு சூரணத்துடன் சேர்த்து உட்கொண்டால் ஒற்றை தலைவலிக்கு உடனடி தீர்வு கிடைக்கும்.
*வில்வ இலையை நன்கு அரைத்து வைத்துக்கொண்டு பதினைந்து நாட்கள் முதல் இருபது நாட்கள் வரை தொடர்ந்து ஒரு பட்டாணி அளவு சாப்பிட்டு வந்தால் நீண்ட நாட்கள் தொல்லை கொடுத்த ஒற்றைத் தலைவலி நீங்கும்.
*பூண்டையும், மிளகையும் தட்டிப்போட்டு நல்லெண்ணெயில் சேர்த்து காய்ச்சி ஆறின பிறகு தலையில் தேய்த்து குளித்தாலும் ஒற்றைத் தலைவலிக்கு நல்ல பலன் கிடைக்கும்.இவைகள் இல்லாமல் தியானம், பிடித்தப் பாடல்கள் கேட்பது, போதுமான ஓய்வு, இயற்கையான உணவுகள் எடுத்துக்கொள்வது, குறிப்பாக வெளிப்புற எண்ணெய்ப் பலகாரங்கள், துரித உணவுகளைத் தவிர்ப்பது போன்ற பழக்கங்களை கடைப்பிடிக்கலாம். நல்ல உறக்கம் மேலும் துணையின் காதல் மற்றும் குடும்பத்தாரின் அன்பும், ஆதரவும்கூட இந்தத் தலைவலிக்கு நல்ல மருந்து. பொதுவாக மனதை திசை திருப்பும் எதுவானாலும் இந்தத் தலைவலிக்கு தீர்வாக இருக்கும். நிறைய தண்ணீர் குடிப்பதும் அவசியம்.

The post மாதவிடாய் கால தலைவலி… தீர்வு என்ன? appeared first on Dinakaran.

Read Entire Article