
ஆக்ரா,
வரி ஏய்ப்பு செய்பவர்களை கண்டுபிடித்து வருமான வரித்துறை எனப்படும் ஐடி துறை அவ்வப்போது நோட்டீஸ் அனுப்புவது வழக்கம்.ஆனால் இந்த ஆண்டில் குறைந்த சம்பளம் பெறும் சிலருக்கு கோடிக்கணக்கில் வருமான வரி செலுத்தக்கோரி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது ஆச்சர்யம் அளிக்கிறது. குறிப்பாக ஜூஸ் கடைக்காரர், பூட்டு செய்பவர், வங்கி துப்புரவு பணியாளர் ஆகியோருக்கு இதுபோன்ற நோட்டீஸ்கள் சமீபத்தில் வந்து பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் உத்தரபிரதேச மாநிலம் அலிகாரை சேர்ந்த ராஜ்குமார் சிங் என்பவருக்கு, ரூ.2 கோடியே 20 லட்சம் கட்டுமாறு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீசில் ராஜ்குமாரின் பான் கார்டு மூலம் டெல்லியில் கோடிக்கணக்கான ரூபாய் பரிவர்த்தனை செய்யப்பட்டு இருப்பதாகவும், அதற்கு அவர் வருமான வரி செலுத்தவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இதுபற்றி ராஜ்குமார் கூறுகையில், நான் ஒரு நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறேன். எனது மாத சம்பளம் ரூ.5 ஆயிரம்தான். எனக்கு எதற்காக இந்த நோட்டீஸ் வந்துள்ளது என்று தெரியவில்லை. அதில் குறிப்பிட்டுள்ள தொகையை பார்த்து எனக்கு அதிர்ச்சியாக உள்ளது. இது தொடர்பாக புகார் செய்ய உள்ளேன் என்று தெரிவித்தார்.
இதுபற்றி அலிகாரில் உள்ள வருமானவரித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ஒவ்வொருவருடைய வருமான வரி கணக்கும் கம்ப்யூட்டரில் கணக்கிடப்படும். அதில் தவறுக்கு வாய்ப்பு இருக்காது. ராஜ்குமாருக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம் என்று கூறினார்.