மாணவிகளை காக்கும் ‘போலீஸ் அக்கா’ திட்டத்துக்கு வரவேற்பால் தமிழகம் முழுவதும் செயல்படுத்த முடிவு

3 months ago 21

கல்லூரி மாணவிகளின் பாதுகாப்புக்காக கடந்த 2022ம் ஆண்டு ‘போலீஸ் அக்கா’ என்ற திட்டத்தை கோவையில், மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் தமிழகத்தில் கோவை மாநகர போலீசில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முக்கிய நோக்கம் மாணவிகள் தாங்கள் சந்திக்கும் பிரச்னைகளை தயங்காமல் போலீசில் தெரிவிக்கவும், பாலியல் அத்துமீறலில் இருந்து அவர்களை பாதுகாப்பதுமே ஆகும்.

முன்பெல்லாம் பெண்கள் வீட்டைவிட்டு வெளியே செல்வதே அபூர்வமாக இருக்கும். ‘‘அடுப்பூதும் பெண்களுக்கு கல்வி எதற்கு?’’ என்ற சொல் வழக்கும் உண்டு. அதன்படி, 50 ஆண்டுகளுக்கு முன்பு கிராமத்தில் உள்ள பெண் குழந்தைகள் பள்ளிப்படிப்பை முடிப்பதே அரிதாக இருக்கும். ஒரு சில பெற்றோரே, அதுவும் வசதி வாய்ப்பு மிக்கவர்களே தங்கள் மகளை பட்டணம் அனுப்பி மேல் படிப்பு வைத்து அரசு வேலை உள்ளிட்ட உயர் பொறுப்புகளில் அமர வைத்து அழகு பார்த்தனர். ஆண்டுகள் கடந்தோட தற்போது அனைத்தும் மாறிவிட்டது.

பெண் குழந்தைகள் படிப்பதை ஊக்குவிக்க தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அரசு பள்ளிகளில் படித்து உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டம், பாலிடெக்னிக், ஐடி படிக்க விரும்பும் மாணவிகளுக்கு உதவித்தொகை போன்றவை அவர்களின் கல்வியை ஊக்குவித்து வருகிறது. இதனை பெற்றோர் பெரிதும் வரவேற்று அரசை பாராட்டி வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க அரசும், காவல் துறையும் மாணவிகள் பாதுகாப்பில் முழு கவனம் செலுத்தி வருகின்றனர். மாணவிகள் சந்திக்கும் பிரச்னைகளை தீர்க்கவும், அவர்கள் படிப்பை தொடர எந்த இடையூறும் ஏற்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டும் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் எண்ணத்தில் உதித்ததுதான் ‘போலீஸ் அக்கா’ திட்டம். இந்த திட்டத்தின்படி, 15 நாட்களுக்கு ஒரு முறை பெண் காவலர்கள் ஒவ்வொரு கல்லூரிக்கும் சென்று மாணவிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர்.

அதன்படி, கோவையில் 70க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோவையில் போலீஸ் அக்காவாக 37 பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மாணவிகளுக்கு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் அதனை தீர்க்கும் பணிகளில் இந்த போலீஸ் அக்காக்கள் செயல்படுவார்கள். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: போலீஸ் அக்கா திட்டத்தின்படி, மாணவிகள் படிக்கும் கல்லூரிகளுக்கே பெண் காவலர்கள் நேரடியாக செல்வார்கள்.

அவர்கள் மாணவிகளிடம் கலந்துரையாடி, நட்போடு பழகி, அவர்களுக்கு வீட்டின் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் மூலமாகவோ, கல்லூரிகளிலோ ஏதாவது அசவுகரியமாக உணர்ந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் என சகோதரிகள்போல உரிமையாக கேட்பார்கள். பொதுவாக மாணவிகள் தாங்கள் சந்திக்கும் பாலியல் அத்துமீறல்கள், கேலி, கிண்டல் ஆகியவற்றை வெளியில் சொல்ல தயங்குவார்கள்.
குறிப்பாக பெற்றோரிடமே அவர்கள் சொல்வது கிடையாது.

இது குறித்து யாரிடம் சொல்வது என்ற அவர்களின் மனக் குழப்பத்தை தவிர்க்கவே இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு கல்லூரியிலும், பெண் காவலர்களின் தொடர்பு எண்கள் ஒட்டப்பட்டுள்ளன. மேலும் கியூ ஆர் கோடும் ஒட்டப்பட்டுள்ளது. இதில் அந்த கல்லூரிக்கு பொறுப்பாளராக உள்ள பெண் காவலர்களின் பெயர், கைபேசி எண் ஆகியவை இடம்பெற்றிருக்கும். மாணவிகள் இதனை ஸ்கேன் செய்து இதன் மூலம் தயங்காமல் போலீசில் புகார் அளிக்கலாம்.

யார், யார் புகார் அளித்தார்கள்? என்பது அந்த மாணவியின் நெருங்கிய தோழி, ஆசிரியர்கள் என யாருக்கும் தெரியாமல் ரகசியம் காத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கப்பட்டது. தற்போது வரை சுமார் 495 புகார்கள் வந்துள்ளன. அதில் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 50 புகார் மீது சிஎஸ்ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாணவிகளுக்கு வாட்ஸ் அப்பில் குறுந்தகவல் அனுப்பி தொந்தரவு செய்வது, காதலிக்கும்போது பிரச்னை ஏற்பட்டால் அவர்கள் செல்போனில் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள், வீடியோவை காட்டி மிரட்டுவது போன்ற புகார்கள் அதிகளவில் வருகின்றன. இந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்து மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே இதன் நோக்கம். இந்த திட்டத்துக்கு தற்போது, மாணவிகள், பெற்றோர் இடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

சமீப காலமாக பள்ளி, கல்லூரிகளில் பாலியல் புகார்கள் வருகின்றன. கல்வி நிலையங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த சில நாட்களுக்கு முன்பு தலைமை செயலாளர் முருகானந்தம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மாநிலம் முழுவதும் கலந்துரையாடல் கூட்டம் நடத்தினார். கோவை நிர்மலா கல்லூரியில் நடந்த இந்த கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகர போலீஸ் கமிஷனர் பால கிருஷ்ணன், கல்லூரி முதல்வர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது தலைமை செயலாளர் முருகானந்தத்திடம் கோவை மாநகரில் செயல்படுத்தப்பட்டு வரும் ‘போலீஸ் அக்கா’ திட்டம் குறித்து விளக்கப்பட்டது. அப்போது, தமிழ்நாடு முழுவதும் இந்த திட்டத்தை செயல்படுத்த கோவை மாநகர போலீசார் சார்பில் முன்மொழியப்பட்டது. தற்போது இந்த திட்டம் மாணவர்கள், பெற்றோரிடம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் செயல்படுத்த முனைப்பு காட்டி வருகின்றனர்.

எனவே விரைவில் இந்த திட்டம் தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் செயல்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு செயல்படுத்தப்பட்டால் மாணவிகள் பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்டு தங்களது பிரச்னைகளை யாரிடம் சொல்லலாம் என்றிருந்த மன குழப்பம் தீரும். போலீஸ் அக்காவால் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். கோவை மாநகரில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த போலீஸ் அக்கா திட்டம், மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும் பட்சத்தில் கல்லூரி மாணவிகள் நிச்சயம் பாதுகாப்பாக உணர்வார்கள்.

* மாணவர்களுக்கு ‘போலீஸ் புரோ’
மாணவர்களுக்காக கோவை நகரில் ‘போலீஸ் புரோ’ என்ற திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில், கல்லூரி மாணவர்கள் ராகிங், போதைப்பொருள் சம்பந்தமாக தங்களது கல்லூரிகளில் நியமிக்கப்பட்ட காவலர்களிடம் புகார் அளிக்கலாம்.

* சுய கட்டுப்பாடு, சுய ஒழுக்கம் கடும் தண்டனை தேவை
போலீஸ் அக்கா திட்டம் குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘மனித வாழ்க்கையில், சுய ஒழுக்கம், சுய கட்டுப்பாடு இல்லாவிட்டால் பெண்களுக்கான வன்முறைகள் குறைவதற்கு சாத்தியமில்லை. சமீபத்தில் டெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார்.

கிருஷ்ணகிரியில் என்சிசி பயிற்சிக்கு சென்ற மாணவி பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. எனவே இது போன்ற குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை மற்றவர்களுக்கு பாடமாகவும், பயம் கொள்ளும்படியும் அளிக்க வேண்டும். அப்போதுதான் பாலியல் குற்றங்களை ஓரளவுக்காவது குறைக்க முடியும்’ என்றனர்.

The post மாணவிகளை காக்கும் ‘போலீஸ் அக்கா’ திட்டத்துக்கு வரவேற்பால் தமிழகம் முழுவதும் செயல்படுத்த முடிவு appeared first on Dinakaran.

Read Entire Article