மாணவி விவகாரத்தில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்

2 weeks ago 2

புதுச்சேரி, ஜன. 19: புதுச்சேரி பல்கலைக்கழக மாணவி விவகாரம் தொடர்பாக புதுச்சேரி அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி பல்கலைக் கழக மாணவி கடந்த 11ம் தேதி தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதை மூடி மறைத்து, அத்துமீறி நுழைதல், ஆபாசமாக திட்டுதல் என்பது குறித்து மட்டும் காவல் துறையினரிடம் புகார் அளித்தது ஏன்? என்று தெரியவில்லை. ஒரு மாநிலத்தில் எவ்வித திட்டமிடுதலும் இல்லாமல் பல அசாதாரணமான சம்பவங்கள் நடைபெறுவது இயல்பாகும். அதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும்போது தவறு செய்பவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தருவதும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நியாயங்கள் கிடைக்கச் செய்வதும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுப்பதும், அரசின் கடமையாகும். பல்கலைக் கழக வளாகத்திற்குள் வெளி நபர்கள் மூலம், சட்டத்திற்கு விரோதமாக மாணவி தாக்கப்பட்டுள்ளதற்கு நிர்வாகம் முழுபொறுப்பு என்பதை பல்கலைக்கழக நிர்வாகம் உணர்ந்துள்ளதாக தெரியவில்லை. இதுகுறித்து எவ்வித விளக்கமும் மக்களுக்கு தெரிவிக்காதது அரசின் பொறுப்பற்ற செயலாகும். இப்பிரச்னையை இதற்கு மேலும் வளரவிடாமல் காவல் துறைக்கும், உயர்கல்வித் துறைக்கும் பொறுப்பேற்றுள்ள உள்துறை அமைச்சர் இதுகுறித்து ஒளிவுமறைவு இல்லாத வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

The post மாணவி விவகாரத்தில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் appeared first on Dinakaran.

Read Entire Article