அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடிகர் விஜய் கடிதம் எழுதியுள்ளதாகக் கூறி அதனை துண்டுபிரசுரமாக வழங்கிய தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உட்பட 250 பேரை சென்னையில் போலீஸார் நேற்று கைது செய்தனர். இதைத்தொடர்ந்து சாலை மறியலும் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக தவெக தலைவர் நடிகர் விஜய் ஏற்கெனவே தனது கண்டனங்களை தெரிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக, நேற்று காலை அன்பு தங்கைகளே என குறிப்பிட்டு பெண்களுக்காக தனது கைப்பட எழுதிய கடிதத்தை, எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அதில், ‘பெண்களுக்கு அண்ணனாகவும், அரணாகவும் துணை நிற்பேன்’ என கூறியிருந்தார்.