மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: சுப்ரீம்கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்த பா.ஜ.க.

4 months ago 11

புதுடெல்லி,

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற கோரி வழக்கறிஞர்கள் வரலட்சுமி மற்றும் மோகன்தாஸ் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ் எம் சுப்பிரமணியம் மற்றும் வி லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மாணவி பாலியல் வழக்கில் எப்ஐஆர் கசிவு எப்படி நடந்தது? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை தமிழக அரசிடம் கேட்டனா்.

அரசு அதிகாரிகள் நடத்தை விதிகளில் பத்திரிகையாளர்களை சந்திக்கும் முன் அரசு அனுமதி பெற வேண்டுமா? என்பது குறித்தும் எப்.ஐ.ஆர். வெளியானது குறித்தும் அதற்கு யார் பொறுப்பு என்பது குறித்தும் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் காவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஐகோர்ட்டு கேட்டு கொண்டது. மேலும் மாணவி பாலியல் வழக்கு குறித்து சிறப்பு விசாரணை குழு அமைக்கவும் கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை தொடர்ந்து சென்னை அண்ணா நகர் துணை ஆணையர் சினேக பிரியா, ஆவடி துணை ஆணையர் ஐமான் ஜமால், சேலம் துணை ஆணையர் பிருந்தா ஆகியோர் கொண்ட மூவர் குழு அமைக்கப்பட்டது. இந்தசூழலில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு தொடர்பாக சுப்ரீம்கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், "அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் சென்னை ஐகோர்ட்டு எஸ்.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டு இருக்கிறது. இந்த சிறப்பு விசாரணை குழுவை எதிர்த்து தமிழ்நாடு அரசு சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட வாய்ப்புள்ளது. தமிழக அரசு தரப்பில் மேல்முறையீட்டு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டால் தங்கள் தரப்பு வாதத்தையும் ஏற்க வேண்டும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு தொடர்பாக சுப்ரீம்கோர்ட்டில் பா.ஜ.க.வும் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. இதன்படி தமிழ்நாடு அரசு சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டால், தங்களது கருத்தினை கேட்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Read Entire Article