சென்னை: பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத் தொகை பெற்று தருவதாகக் கூறி பெற்றோர்களிடம் பணம் பறிக்கும் கும்பலிடம் கவனமாக இருக்க வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை எச்சரித்துள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் இன்று அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப் பிரிவுகளில் பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கு 10 நாட்கள் தொழிற் பயிற்சி (இன்டர்ன்ஷிப்) அளிக்கப்பட்டு வருகிறது. அந்த பயிற்சியை முடித்த மாணவர்களுக்கு ரூ.1000 ஊக்கத் தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட உள்ளது. இதற்காக அனைத்துப் பள்ளிகளிலும் ஆதார் பதிவுத் திட்டம் உட்பட செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.