லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் தேசிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த கொள்கை அடிப்படையில் வளங்களை ஒருங்கிணைத்தல், உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், தேசிய கல்விக் கொள்கை 2020ன் இலக்குகளுடன் சீரமைப்பதாக கூறிக்கொண்டு, குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட பள்ளிகளை மூடி, அருகில் உள்ள பள்ளிகளுடன் இணைக்கும் முயற்சியை முதல்வர் யோகி தலைமையிலான பா.ஜ அரசு மேற்கொண்டது. இதையடுத்து உபி மாநிலம் முழுவதும் உள்ள 1.3 லட்சம் அரசு தொடக்கப் பள்ளிகளில் குறைந்த மாணவர் பதிவு கொண்ட 10,000க்கும் மேற்பட்ட பள்ளிகளை இணைக்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. அவற்றை மூடவும் யோகி அரசு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 50க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பள்ளிகளை அருகிலுள்ள பள்ளிகளுடன் இணைக்க உத்தரவிட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேச அரசின் இந்த முடிவை எதிர்த்து நூற்றுக்கணக்கான அப்னா தளம் (காமராவதி) தொண்டர்கள் நேற்று லக்னோவில் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டக்காரர்கள் லால்பாக்கில் உள்ள கட்சியின் மைய அலுவலகத்தில் கூடி, சட்டப்பேரவை நோக்கி பேரணியாக சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதை தொடர்ந்து ஆளுநரை சந்தித்து மனு அளித்தனர். இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் பல்லவி படேல் கூறுகையில்,’ பள்ளி மூடல்கள் கிராமப்புறங்களில் பெண் குழந்தைகளின் கல்வியைப் பாதிக்கும். மேலும் அவர்கள் கல்வி முறையிலிருந்து வெளியேற்றப்படுவார்கள். ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் ஒரு தொடக்கப் பள்ளியும், மூன்று கிலோமீட்டருக்குள் ஒரு மேல்நிலைப் பள்ளியும் இருக்க வேண்டும்’ என்றார்.
27 ஆயிரம் பள்ளிகளை மூட திட்டம்: பிரியங்கா
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறுகையில்,’ உபி அரசு தற்போது 5 ஆயிரம் பள்ளிகளை மூட உத்தரவிட்டுள்ளது. ஆனால் ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்த தகவல் அடிப்படையில் 27 ஆயிரம் பள்ளிகளை மூட யோகி அரசு முடிவு எடுத்துள்ளது. பள்ளிகள் வீட்டிலிருந்து வெகு தொலைவில் அமைந்திருந்தால், சிறு குழந்தைகள், குறிப்பாக பெண்கள், பள்ளியை அடைய பல கிலோமீட்டர் தூரம் எப்படி நடந்து செல்வார்கள்? அவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்பது வெளிப்படையானது. இந்த உரிமை ஏன் குழந்தைகளிடமிருந்து பறிக்கப்படுகிறது?’ என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
The post மாணவர் எண்ணிக்கையை காரணம் காட்டி உபியில் 10 ஆயிரம் அரசு பள்ளிகள் மூடல்..? முதல்வர் யோகி நடவடிக்கையால் சர்ச்சை appeared first on Dinakaran.