மாட்டுத்தாவணியில் வெங்காய மார்க்கெட்; ரூ.10.30 கோடியில் 79 கடைகள் கட்டுமான பணிகளில் வேகம்: ஆறு மாதங்களில் திறப்பு என தகவல்

4 weeks ago 6


மதுரை: மதுரை மாநகரின் நெரிசலை போக்கும் வகையில், கீழமாரட் வீதியிலிருந்து மாட்டுத்தாவணிக்கு வெங்காய மார்க்கெட் இடமாற்றம் செய்யப்படுகிறது. இதற்காக ரூ.10.30 கோடியில் மாநகராட்சியின் 79 கடைகள் கட்டுமான பணிகள் வேகமடைந்துள்ளன. இன்னும் 6 மாதத்தில் திறப்பு விழா காண்கிறது. மதுரை கீழமாரட் வீதியில் உள்ளது வெங்காய மார்க்கெட். தமிழகத்தில் நூற்றாண்டுக்கும் அதிக பழமைக்குரிய இந்த மார்க்கெட்டினால், தற்போது இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. நகருக்குள் போக்குவரத்து நெரிசலை போக்கும் வகையில் இங்கிருந்து, மதுரை மாட்டுத்தாவணிக்கு இந்த மார்க்கெட்டை மாற்ற முடிவானது. இதன்படி ரூ.10.30 கோடியில் 79 கடைகள் கொண்ட பிரம்மாண்ட மார்க்கெட் கட்டும் பணி துவங்கி நடந்து வருகிறது.

மதுரை கீழமாரட் வீதி வெங்காய வியாபாரிகள் கூறும்போது, ‘மதுரை பகுதிகளில் இருந்தும், திண்டுக்கல், நெல்லை, தேனி உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் சின்ன வெங்காயம், தென் மாவட்ட பகுதிகளுடன் கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து பெரிய வெங்காயம் விற்பனைக்கு வருகிறது. தினமும் இந்த இரு வகை வெங்காயமும் கீழமாரட் வீதி கடைகளில் தலா 200 டன்னுக்கும் மேல் விற்பனை நடக்கிறது. பகலில் சில்லறை விற்பனையுடன், இரவில் விடிய, விடிய மொத்த விற்னையும் நடத்தப்படுகிறது. மதுரை தென்பகுதியில் போக்குவரத்து, வாகன நெரிசல் கட்டுப்படுத்தும் வகையிலும், சரக்கு வாகனங்கள், பொதுமக்கள் வந்து செல்வதில் ஏற்படும் சிரமங்களை குறைக்கும் வகையிலும், தற்போது கீழமாரட் வீதி கடைகள் மாட்டுத்தாவணிக்கு மாற்றப்படுகிறது.

ஏற்கனவே சிம்மக்கல் பகுதியில் இருந்த பழம் மார்க்கெட், பழைய சென்ட்ரல் காய்கறி மார்க்கெட் மாட்டுத்தாவணிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதனை வியாபாரிகள் வரவேற்கிறோம். அதேபோல், வியாபாரிகள், பொதுமக்களுக்கான முழுமையான வசதிகளை புதிய மார்க்கெட்டில் மாநகராட்சி அமைத்துத் தருவது அவசியம்’ என்றனர். மதுரை மாநகராட்சி உதவி பொறியாளர் காமராஜ் கூறும்போது, ‘’மதுரை மாட்டுத்தாவணியில் வெங்காய மார்க்கெட் கட்டுமான பணிகள் தீவிரமாக நடக்கிறது. இந்த 79 கடைகள் கட்டுமானத்தில், இதுவரை 42 கடைகளுக்கான பணிகள் முடிவுற்றுள்ளன.

தொடர்ந்து கட்டுமானம் நடந்து வருகிறது. 59 பெரிய கடைகளுக்குள்ளேயே கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும், 20 சிறு கடைகளுக்கு பொதுக்கழிப்பறையுடன் பல்வேறு அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்படுகிறது. பணிகளை வேகப்படுத்தி இன்னும் 6 மாதத்திற்குள் இந்த மார்க்கெட் வணிகர்கள், மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்’’ என்றார்.

The post மாட்டுத்தாவணியில் வெங்காய மார்க்கெட்; ரூ.10.30 கோடியில் 79 கடைகள் கட்டுமான பணிகளில் வேகம்: ஆறு மாதங்களில் திறப்பு என தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article