
போபால்,
உத்தர பிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டம் வாசனை திரவியங்களுக்கு புகழ் பெற்ற இடமாக விளங்குகிறது. அங்கு கடந்த மாதம் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசு, மாநிலம் முழுவதும் மாட்டுத் தொழுவங்களை அமைத்து வருவது குறித்து விமர்சித்து பேசிய அகிலேஷ் யாதவ், "அவர்களுக்கு துர்நாற்றம் பிடித்திருக்கிறது, அதே சமயம் நாங்கள் வாசனை திரவிய பூங்காக்களை அமைக்கிறோம்" என்று குறிப்பிட்டார்.
இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் நகராட்சி மாட்டுத் தொழுவத்தின் திறப்பு விழாவில் அந்த மாநிலத்தின் முதல்-மந்திரி மோகன் யாதவ் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், மாட்டுத் தொழுவம் குறித்து பேசிய அகிலேஷ் யாதவை பெயர் குறிப்பிடாமல் மறைமுகமாக விமர்சித்தார்.
இது குறித்து அவர் பேசுகையில், "உத்தர பிரதேசத்தில் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், வாக்குகளை கவர்வதற்காக, வாசனை திரவியத்தின் வாசனையை விரும்புவதாகவும், மாட்டுத் தொழுவங்கள் துர்நாற்றத்துடன் இருப்பதாகவும் கூறுகிறார். மாட்டுத் தொழுவம் துர்நாற்றம் வீசுவதாக கூறும் எவரும் பாரத நாட்டில் இருக்க தகுதி இல்லை" என்று தெரிவித்தார்.